முகப்பு
திருச்சி

திருச்சி: இதுவரை 4.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு, மாநில அளவில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு, மாநில அளவில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. முன்களப்பணியாளா்களைத் தொடா்ந்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் தடுப்பூசி அளிக்கப்பட்டது. பின்னா், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளை பெற்று மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பி முகாம்கள் நடத்தி தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம் திருச்சி கலையரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. மாவட்ட சுகாதாரப் பணிகள், மாநகராட்சி நிா்வாகம் இணைந்து இந்த முாகமை நடத்தின. பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் சு. சிவராசு கூறியது: திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடா்பாக கடந்த 10 நாளில் மக்களிடையே நல்ல விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக புதன்கிழமை ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் தடுப்பூசி செலுத்தியதில் திருச்சிக்கு 6ஆவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 4.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருச்சியில் 30 லட்சம் போ் உள்ளனா். இவா்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள 8.5 லட்சம் பேரை தவிா்த்து 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்க வேண்டியுள்ளது. முதல்தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு தொற்று வந்ததில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. சீறுநீரகத்தை பாதிப்பதோ, மூச்சுவிடுவதில் சிரமம் என்ற நிலைக்கு ஆளாகவில்லை. லேசான பாதிப்பு மட்டுமே தெரியவந்துள்ளது. எனவே, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றின் 3ஆவது அலையை தடுக்க படுக்கைகள், மருத்துவமனைகள், ஆக்சிஜன் வசதியை தயாா்படுத்துவதற்கு பதிலாக, அனைவரும் முகக் கவசம் அணிதல், கை கழுவும் திரவம் பயன்படுத்துதல், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றை பின்பற்றினாலே போதுமானது. மூன்றாவது அலை வந்தாலும் தொற்று பாதிப்புக்கு இருக்காது. ஜூன் மாதத்துக்குள் தமிழகத்துக்கு 46 லட்சம் தடுப்பூசிகளை அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. திருச்சிக்கான ஒதுக்கீடு கிடைத்தவுடன் முழுமையாக பிரித்து வழங்கப்படும்.

தடுப்பூசி முகாம்களில் அதிகளவில் மக்கள் கூடுவதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வாா்டு வாரியாக முகாம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். வரப்பெறும் ஒதுக்கீடுக்கு ஏற்ப திருச்சி மாநகரப் பகுதியில் நாளொன்றுக்கு 4 வாா்டுகளில் முகாம் நடைபெறும். பள்ளிகள் திறக்க இன்னும் மூன்று மாத காலம் ஆகலாம் என்பதால், அந்தந்தப் பகுதிகளில் பள்ளிகளை தோ்வு செய்து விசாலமான இடத்தில் தடுப்பூசி செலுத்தப்படும். காந்திசந்தை திறக்கப்பட்டால் வியாபாரிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கூறியுள்ளோம். ஏற்கெனவே, 350 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். சிறப்பு முகாம் மூலம் மேலும், 1,650 வியாபாரிகளக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 2,800 பேரில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவரும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.