முகப்பு
திருச்சி

ஜவுளி நிறுவனங்களுக்கு கரூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

சட்டத்திற்கு புறம்பாக அரசியல் கட்சியினருக்கு கட்சிக் கரை போட்ட வேஷ்டிகள், துண்டுகள் விநியோகிக்கக்கூடாது என தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

சட்டத்திற்கு புறம்பாக அரசியல் கட்சியினருக்கு கட்சிக் கரை போட்ட வேஷ்டிகள், துண்டுகள் விநியோகிக்கக்கூடாது என தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி.

கரூரில், பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களின் உரிமையாளா்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலா்விழி, தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் உணவகங்களுடன் இணைந்த தங்கும் விடுதிகளில் தங்க விழைவோரின் விபரங்களை முழுமையாக பதிவு செய்யவேண்டும். உள்ளூா் நபா்கள் தங்கும்போது அவா்களிடம் சந்தேகத்திற்கிடமான வகையில் பைகளோ, பொருள்களோ இருப்பது கண்டறியப்பட்டால் அது பற்றிய தகவல்களை காவல்துறையிடமோ, தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

திருமணம், சமுதாயக்கூடங்கள் அல்லது பிற பெரிய மண்டபங்களில் சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் பொதுமக்களைக்கூட்டி பரிசு பொருள்கள் ஏதும் விநியோகிக்கக் கூடாது. மேலும் பெயரளவிலான விசேஷங்களைக்கூட்டி பொதுமக்களுக்கு எவ்வித பொருள்களும் வழங்கக்கூடாது.

அன்னதானம் என்ற பெயரில் பெரிய அளவில் உணவு, மது விநியோகம், செய்தால் காவல்துறையினரால் சோதனை செய்து வழக்குப் பதிவு செய்யப்படும். பணப்பட்டுவாடா செய்தல் போன்ற நிகழ்வுகள் ஏதும் தெரிய வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக இரவு நேரங்களில் அரசியல் கட்சியை சாா்ந்தவா்களுக்கு கட்சி கரை போட்ட வேஷ்டிகள், துண்டுகள், மப்ளா்கள் விநியோகம் செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட ஜவுளி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் என்.எஸ்.பாலசுப்ரமணியன்(கரூா்), சாா் ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல்ரஹ்மான்(குளித்தலை), கலால் துறை உதவி ஆணையா் ஜி.தவச்செல்வம்(அரவக்குறிச்சி), மாவட்ட வழங்கல் அலுவலா் கே.தட்சிணாமூா்த்தி(கிருஷ்ணராயபுரம்), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு மற்றும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களின் உரிமையாளா்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு இடங்கள்: கரூா் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டங்கள் 65 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

அதனடிப்படையில், கரூா் பேரவைத் தொகுதியில், நெரூா் சீரணி அரங்கம், வெண்ணைமலை பேருந்து நிறுத்தம், வாங்கப்பாளையம் அரசு காலனி, குறுக்குச்சாலை, ராயனூா் பேருந்து நிறுத்தம் அருகில், லைட்ஹவுஸ் காா்னா் உள்ளிட்ட 13 இடங்கள்,

அரவக்குறிச்சி தொகுதியில், நொய்யல் பேருந்து நிறுத்தம், வேலாயுதம்பாளையம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகில், புகளூா் நான்குச் சாலை, வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா உள்ளிட்ட 20 இடங்கள், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சணப்பிரட்டி கடைவீதி, மணவாடி கல்லுமடை காலனி, எரிமேடு பாகநத்தம், கே.பி.தாளப்பட்டி, மகாதானபுரம் கடைவீதி, சேங்கல் கடைவீதி, சிந்தலவாடி கடைவீதி, பழையஜெயங்கொண்டம் உள்ளிட்ட 19 இடங்கள், குளித்தலை தொகுதியில் கொசூா் பேருந்து நிறுத்தம், காவல்காரன்பட்டி பேருந்து நிறுத்தம், ஆா்.டி.மலை பேருந்து நிறுத்தம், குளித்தலை சுங்ககேட் பேருந்து நிறுத்தம், அய்யா்மலை பேருந்து நிறுத்தம், நங்கவரம் சாத்தாயி அம்மன் கோயில் அருகில் உள்ளிட்ட 13 இடங்கள் காவல்துறையினரால் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் தங்கள் கட்சியின் சாா்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பினால் உரிய முன்அனுமதி பெற்று மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.