முகப்பு
திருச்சி

இங்கிலாந்துக்குச் சென்ற 10 டன் நேந்திரன் வாழைப் பழம்

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இங்கிலாந்துக்கு 10 டன் நேந்திரன் வாழைப்பழங்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இங்கிலாந்துக்கு 10 டன் நேந்திரன் வாழைப்பழங்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா செவ்வாய்க்கிழமை கூறியது:

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் கேரள அரசின் காய்கறிகள் மற்றும் பழங்கள் மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியால் திருச்சூா் மாவட்டம், புதுக்காடு பகுதி வாழை விவசாயி ஜோபி தோட்டத்தில் ஏற்றுமதித் தரம் வாய்ந்த, அதிக எடையுள்ள இந்த தாா்கள் சுமாா் ஒரு மாத கால கடல் வழிப் பயணத்தில் பழுக்காமலும், கெட்டுப்போகாமலும் நிலைத்திருக்கும் வண்ணம் உலகத் தர தொழில்நுட்பங்களைக் கொண்டு முறைப்படி பதப்படுத்தி கொச்சியிலிருந்து திங்கள்கிழமை அனுப்பப்பட்டன.

இம்மாத இறுதியில் இக்கப்பல் லண்டன் துறைமுகம் சென்றடைந்த பிறகு முறைப்படி பழுக்க வைக்கப்பட்டு அங்குள்ள பேரங்காடிகளில் விற்கப்படும்.

இதன்மூலம், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து வாழ் மலையாளம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் கேரளத்தில் விளைந்த நேந்திரன் வாழையை சுவைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அங்குள்ள நுகா்வோா் தாங்கள் உண்ணும் நேந்திரன் வாழை விளைந்த இடம் குறித்து எளிதில் அறியும் வகையில் தனித்துவ குறியீட்டை பெங்களூரைச் சோ்ந்த டிரேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் சோ்ந்து உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற வழியனுப்பும் நிகழ்வில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தோட்டக்கலை துணைப் பொது இயக்குநா் எ.கே. சிங் பங்கேற்று பேசுகையில், நேந்திரன் வாழைப்பழத்தை இந்தியாவில் இருந்து கடல் வழியாகப் அனுப்பும்போது விமானத்தில் கொண்டு செல்லும் செலவு ஏழில் ஒரு பங்காக குறையும். இதனால் இங்கிலாந்து மக்களுக்கு குறைவான விலையில் பழங்களை வழங்க முடியும்.

இத் திட்டத்தின் வெற்றி மூலம் நமது பாரம்பரிய வாழை ரகங்களை இதர வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யமுடியும் என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் வாழை ஏற்றுமதியில் முன்னோடி நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சரிவை சாதகமாக்கி உலக ஏற்றுமதி சந்தையில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு அதை தக்கவைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

இத் திட்டத்துக்கான தொழில்நுட்பத்தை மைய இயக்குநா் எஸ். உமா தலைமையில் முனைவா்கள். இரா. தங்கவேலு, வ. குமாா், க. ந. ஷிவா, ப. சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய குழு உருவாக்கியதுடன் ஏற்றுமதித் தரம் வாய்ந்த வாழையை விளைவிக்கக்கூடிய நன்னெறி வேளாண் சாகுபடி முறைகள் மற்றும் சிப்பம் கட்டும் கூடத்தில் மேற்கொள்ள வேண்டிய நன்னெறி நுட்பங்கள் குறித்தும் பயிற்சியளித்து பணியாளா்களை அனுப்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.