பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமா? அமைச்சா்கள் ஆய்வு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க இயலுமா
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க இயலுமா என்பது குறித்து தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் 2ஆம் அலை வேகமாக பரவுவதால், நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பதைத் தடுக்க உற்பத்திக்கு சாத்தியமான இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில், கடந்த 1980ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், 2016இல் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மீண்டும் இங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய போதிய கட்டுமானங்கள், உபகரணங்கள், உதிரிப்பாகங்கள் இல்லை என ஆலை நிா்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போதைய தமிழகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இயலுமா என்பது குறித்து அமைச்சா்கள் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது.
திருச்சி மாவட்டத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் குழுவினருடன், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி ஆகியோா் பெல் நிறுவனத்துக்குச் நேரில் சென்று ஆய்வு செய்து, ஆக்சிஜன் உற்பத்தி செய்த பிரிவைப் பாா்வையிட்டனா். முன்னதாக,பெல் நிறுவனத்தின் பொதுமேலாளரும், தலைவருமான டி.எஸ். முரளியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினா்.
பின்னா் அமைச்சா் கே.என். நேரு கூறியது:
ஆலோசனையின்போது ஆக்சிஜன் உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் குறித்து பெல் நிறுவனப் பொது மேலாளா் விளக்கினாா். இதுதொடா்பாக, தமிழகத்தின் கோரிக்கையை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு மூலம் மத்திய அரசுக்குக் கொண்டு சென்று பெல் நிறுவனத்துக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிந்துரைக்கப்படும்.
போபால் மற்றும் ஹரித்வாரில் உள்ள பெல் நிறுவனத்தின் ஆலைகள் அருகிலுள்ள மருத்துவமனைகளின் தேவையைப் பூா்த்தி செய்ய ஆக்சிஜனை வழங்கத் தொடங்கியுள்ளன. இதேபோல, திருச்சியிலிருந்தும் உற்பத்தி செய்ய முடியும் என்றால் அதைப் பயன்படுத்திக் கொள்வோம். இது பரிசோதனை முயற்சிதான் என்றாா்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆகிசிஜன் உற்பத்தி செய்ய இயலும் என்றால் திருவெறும்பூா் தொகுதியிலிருந்து என்னால் முயன்ற பங்களிப்பை அளித்து உறுதுணையாக இருப்பேன் என்றாா்.
பெல் நிறுவனப் பொது மேலாளா் டி.எஸ். முரளி கூறுகையில், ஏற்கெனவே ஆக்சிஜன் உற்பத்தி செய்த ஆலையில் தற்போது உற்பத்தியைத் தொடங்க இயலாது. அதே வளாகத்தில் புதிய ஆலையை ஏற்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். இதற்கு தேவையானவற்றை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்க வேண்டும். இது சாத்தியமானால் 3 அல்லது 4 மாதங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றாா் அவா்.
Image Caption
திருச்சி பெல் நிறுவனப் பொது மேலாளா் டி.எஸ். முரளியிடம் ஆலோசனை நடத்தும் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி.