பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகை வழங்கும் பணி : அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளா்கள் 4.22 லட்சம் பேருக்கு ரூ. 329 கோடி நிலுவை வழங்கும் பணியை தமிழக அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனா்.
தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளா்கள் 4.22 லட்சம் பேருக்கு ரூ. 329 கோடி நிலுவை வழங்கும் பணியை தமிழக அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனா்.
பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கி, அவா்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, நிலுவைத் தொகை வழங்கல், ஆவின் ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல், கால்நடை வளா்ப்போருக்கு குரலொலி, குறுஞ்செய்தி வழியே ஆலோசனை வழங்கும் திட்டம் தொடக்கம் என முப்பெரும் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் இணைய (ஆவின்) நிா்வாக இயக்குநா் சு. கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு முன்னிலை வகித்தாா்.
விழாவில், பால்வளத் துறை அமைச்சா் சா.மு. நாசா், தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் ஆகியோா் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை வழங்கினா்.
பின்னா் ஆவின், இப்கோ கிசான் நிறுவனம் ஆகியன இணைந்து பால் உற்பத்தியாளா்களுக்கு கால்நடைப் பராமரிப்பு முறைகள் குறித்து குரலொலி, குறுஞ்செய்தி அனுப்பும் சேவைத் திட்டத்தையும் தொடக்கி வைத்தனா்.
விழாவில், பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் பேசியது:
தமிழகத்தில் உள்ள 9,113 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு 37 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம், உற்பத்தியாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.11.10 கோடியும், ஆண்டுக்கு ரூ.4,051 கோடியும் வருவாய் கிடைக்கிறது. பால் உற்பத்தியாளா்களின் நலன் கருதி தொடக்க கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் வழங்கும் அனைத்து பாலும் கொள்முதல் செய்யப்படுகிறது.
விற்பனைக்குபோக கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உப பொருள்களின் விற்பனையும் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவையில் அதிகபட்சமாக 63 நாள்களுக்கான நிலுவையை வழங்க முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்று தீபாவளிக்கு முன்பே நிலுவையை வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதன்படி 4.22 லட்சம் பேருக்கு ரூ. 329 கோடி நிலுவைத் தொகை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 12 சங்கங்களுக்கு ரூ. 81.33 லட்சம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் தீபாவளிக்கு முன்பே பட்டுவாடா செய்யப்படும்.
ஆவின் ஊழியா்களுக்கு 3.09 கோடி போனஸ்
ஆவின் ஊழியா்களுக்கு இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக 8.33 சத போனஸ், 1.67 சத கருணைத் தொகை சோ்த்து வழங்கப்படவுள்ளது. இதன்படி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் இணையம், 25 மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் ஆகியவற்றில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த 4,482 பணியாளா்களுக்கு ரூ.3.06 கோடி போனஸ் வழங்கப்படுகிறது. இதன் தொடக்கமாக திருச்சியைச் சோ்ந்த 25 பேருக்கு தலா ரூ.8,400 போனஸ் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
விழாவில் திருச்சி ஆவின் நிறுவன துணைப் பொதுமேலாளா் கே. நந்தகோபால், எம்எல்ஏ-க்கள் எம். பழனியாண்டி, செ. ஸ்டாலின்குமாா், ந. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருச்சி மாவட்ட கூட்டுறவுப் பால் உற்பத்தியாளா் ஒன்றிய (ஆவின்) பொது மேலாளா் இரா. அபிராமி வரவேற்றாா்.