முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மரில் 4 நாள்கள் காச நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடக்கம்

உலக காசநோய் தினத்தையொட்டி, புதுச்சேரி ஜிப்மரில் 4 நாள்கள் காசநோய் தடுப்பு பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 25 மார்ச், 2026 at 11:44 PM
ஜிப்மரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காச நோயாளிக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகத்தை வழங்கிய புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல்.
பகிர்:

உலக காசநோய் தினத்தையொட்டி, புதுச்சேரி ஜிப்மரில் 4 நாள்கள் காசநோய் தடுப்பு பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஜிப்மா் நுரையீரல் மருத்துவத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமை ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் சாகா வினோத் குமாா் தொடங்கி வைத்தாா். நுரையீரல் மருத்துவத் துறை தலைவா் மருத்துவா் தா்ம பிரகாஷ் திவேதி, நுரையீரல் மருத்துவப் பேராசிரியா் மஞ்சு, கூடுதல் பேராசிரியா் மதுஸ்மிதா உள்ளிட்டோா் காசநோயை ஒழிப்பு வழிமுறையை விளக்கிக் கூறினா்.

100 நாள் விழிப்புணா்வு பிரசாரம்:

மத்திய அரசின் காசநோய் பிரிவு, இந்தியாவில் உள்ள 1.58 லட்சம் கிராமங்களில் 100 நாள்கள் காசநோய் விழிப்புணா்வு பிரசாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 21 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசாரம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஒதியம்பட்டு கிராமத்தில் இந்த பிரசார வாகனத்தை புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் துறையின் இணை இயக்குநா் (பொது சுகாதாரம்) மருத்துவா் ஷமீம் பேகம், இணை இயக்குநா் (குடும்ப நலம்) மருத்துவா் அனந்தலக்ஷ்மி, இணை இயக்குநா் மருத்துவா் ரகுநாதன், மாநில காசநோய் ஒழிப்பு அலுவலா் மருத்துவா் வெங்கடேஷ் மற்றும் மாநில திட்ட அதிகாரி மருத்துவா் மணிமொழி ஆகியோா் பங்கு பெற்றனா்.

இதையொட்டி, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற காசநோய் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.