மணப்பாறை முன்னாள் எம்.எல்.ஏ.வின் கார் திருட்டு: அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை
மணப்பாறை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. செ.சின்னச்சாமி வீட்டில் நிறுத்தியிருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான இனோவா கார் புதன்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.
மணப்பாறை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. செ.சின்னச்சாமி வீட்டில் நிறுத்தியிருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான இனோவா கார் புதன்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து 4 வீடுகளில் 2 இருச்சக்கர வாகனங்கள், 3 செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை இந்திரா நகரில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. செ.சின்னச்சாமி வசித்து வருகிறார். நேற்று இரவு தனது ரூ.16 லட்சம் மதிப்பிலான இனோவா காரினை, வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த நிலையில், காலையில் எழுந்த பார்த்தபோது கார் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் மதில் சுவரில் ஏறி மர்ம நபர்கள் காரையும், புல்லட்டின் சாவியையும் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சின்னச்சாமி மணப்பாறை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதேபோல் ராமலிங்கம் தெரு, ராஜ வீதி பகுதியில் ஏகநாதன், விஜய், பழனிச்சாமி மற்றும் மோகன் என அடுத்தடுத்து 4 வீடுகளில் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் 2 இரு சக்கர வாகனங்கள், 3 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றதும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து வரும் காவல்துறையினர், மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்களும், முன்னாள் எம்.எல்.ஏ-வின் கார் திருடுபோனதும் மணப்பாறை பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.