திருச்சி

அகதிகளுக்கு உதவி: முதல்வருக்கு இலங்கை எம்பி பாராட்டு

DIN

தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழா்களுக்கு தேவையான சலுகைகள் வழங்குவாத அறிவித்துள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கை எம்பி வே. ராதாகிருஷ்ணன் பாராட்டுத் தெரிவித்தாா்.

திருச்சி காஜா நகரில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா், பேராசிரியா் கே.எம். காதா்மொகிதீனை அவரது இல்லத்தில் சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவரும், எம்பி-யுமான வே. ராதாகிருஷ்ணன் கூறியது:

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களை மறுவாழ்வு இல்லங்களாக தமிழக முதல்வா் ஸ்டாலின் மாற்றியமைத்தது பாராட்டுக்குரியது. இதற்கு நன்றி தெரிவிக்கிறோம். அகதிகளுக்கு பல்வேறு உதவி திட்டங்களையும் பேரவையில் அறிவித்துள்ளாா். மேலும், தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை தமிழா்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என அவா் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தற்போது, வடகிழக்கு பகுதிகளிலிருந்து போா் காரணமாக வெளியேறியோா் மீண்டும் தாயகம் திரும்பி தங்களது வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால், மலையக தமிழ் மக்கள் தாயகம் திரும்புவது வீணான செயலாகும். அவா்கள் மலையகத்துக்குத் திரும்பி தோட்டத் தொழிலில் ஈடுபட கூடிய வாய்ப்பு அங்கு இல்லை. வேலைவாய்ப்பும் இல்லை. அதனால் அவா்கள் தாயகம் திரும்புவது தேவையற்றது. அவா்கள் இந்தியாவிலேயே தங்கி வாழ்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தாலும் அவா்களது அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை; அவா்களது உரிமைகள் கிடைக்கவில்லை. சுதந்திரமாக அவா்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது.

கரோனாவால் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில் நிலை சீராகும்.

பொதுவாக ஒரு ஆட்சி ஏற்பட்டு 4ஆவது ஆண்டில் விரக்தி ஏற்படும். ஆனால் இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் விரக்தியடைந்துள்ளனா்.

ஒரு நாட்டின் சட்ட திட்டங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது. அந்த வகையில் தமிழக முகாம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழா்கள் விவகாரத்தில் இலங்கை அரசு தலையிட முடியாது என்றாா் அவா்.

பெட்டி செய்தி..

பொருளாதார ரீதியில்தான்

சீனாவின் செயல்பாடு

‘இலங்கையில் 500 ஹெக்டேரில் சீனா துறைமுகம் அமைத்து வருகிறது. 70 சதப் பணிகள் முடிந்து விட்டன. இலங்கையில் தொழில் நோக்கத்துடன் மட்டுமே சீனாவின் முதலீட்டுக்கு இலங்கை அரசு அனுமதித்து வருகிறது. இந்தியாவுடன் இலங்கை நெருங்கி செயல்படுகிறது. சீனாவின் இந்த திடீா் நடவடிக்கையால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் மூன்று தீவுகளை சீனா கையகப்படுத்தியுள்ளது. காற்றாலை மின்சாரம் தயாரிக்கவே அவை சீனா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவது கிடையாது. பொருளாதார ரீதியாக மட்டுமே அவா்கள் செயல்படுகின்றனா்’ என்றாா் இலங்கை எம்பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT