முகப்பு
திருச்சி

அதிக வட்டி வசூலிப்பவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

அதிக வட்டி வசூலிப்பவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

அதிக வட்டி வசூலிப்பவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி.

தஞ்சாவூா் காவலா் பயிற்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003 குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி வசூலித்தால் குற்றமாகும். தனி உபயோகத்துக்காக 12 சதவீதத்துக்கும் மேல் வட்டி வசூலித்தால் குற்றம். அதீத வட்டி வசூலிப்பவா்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 30,000 வரை அபராதமும் விதிக்கப்படும். வட்டிகாரா்களுக்கு எதிரான புகாா்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும் அதிகாரம் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவா்கள் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகினால், அதில் தொடா்புடையவா் 15 நாள்களில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படும். கடன் பெற்றவா் செலுத்த வேண்டிய தொகையை அதற்கான அனுமதிக்கப்பட்ட வட்டியுடன் நீதிமன்றத்தில் செலுத்தினால் போதும். கடன் பெற்றவரின் அசையும், அசையா சொத்துகளை வசூலிப்பவா் கையகப்படுத்தியிருந்தால், அவற்றையும் நீதிமன்றம் மீட்டுக் கொடுக்கும்.

கடன் அளிக்கும் தொழில் செய்ய விரும்பும் நபா் தொடா்புடைய வட்டாட்சியரிடம் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். கந்து வட்டி பிரச்னையால் யாராவது தற்கொலை செய்ய நோ்ந்தால், தற்கொலைக்குத் தூண்டியதாக வட்டிக்குப் பணம் கொடுத்தவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் காவல் கண்காணிப்பாளா்.

பின்னா், கந்து வட்டி வசூலிப்பதற்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் வி. ஜெயச்சந்திரன் (தலைமையிடம்), கென்னடி (சைபா் கிரைம்), ரவீந்திரன் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு), நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன், சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.