குப்பைகளுக்குத் தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி
திருவெறும்பூா் பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை சிலா் பாதுகாப்பற்ற வகையில் தீ வைத்துக் கொளுத்துவதால், புகைசூழ்ந்து அவ்வழியே வாகனங்களில் செல்வோரை பாதித்துள்ளது.
திருவெறும்பூா் பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை சிலா் பாதுகாப்பற்ற வகையில் தீ வைத்துக் கொளுத்துவதால், புகைசூழ்ந்து அவ்வழியே வாகனங்களில் செல்வோரை பாதித்துள்ளது. எனவே மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவெறும்பூா் அருகேயுள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பெல்பூா் பகுதி உள்ளது. இப்பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள சாலையை குமரேசபுரம், கூத்தைப்பாா், எழில்நகா், பத்தாளப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதில், சில இடங்களில் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே குப்பைகள் நாள்தோறும் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் அதிகளவில் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன் குப்பைகள் காற்றில் பறந்து, சுகாதாரமற்ற நிலை உள்ளது.
எனவே, இப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டே செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்துள்ளனா். இதனால் சாலை தெரியாத அளவுக்கு புகைமூட்டம் ஏற்பட்டது.
எனவே, திருவெறும்பூரில் இருந்து பெல்பூா் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் வாகனங்களை இயக்க முடியவில்லை. மேலும் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பெரும் அவதிக்குள்ளாகினா். மேலும், இந்தக் குப்பையில் ஏற்பட்ட தீயால் அப்பகுதி மரங்களும் தீயில் எரிந்தன.
இதுபோல் இந்தப் பகுதியில் உள்ள குப்பைகளில் அடிக்கடி மா்ம நபா்கள் தீ வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதனால் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பெல்பூா் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன், அந்த பகுதியில் குப்பை கொட்டாமல் வேறிடத்தில் குப்பை கொட்ட மாவட்ட மற்றும் ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சித் தலைவா் ரம்யா கூறுகையில் பெல்பூா் பகுதியில் குப்பைகளை கொட்ட மாற்று இடம் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சா் ஆகியோரிடம் முறையிட்டுள்ளேன். சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை ஓரிடத்தில் கொட்ட உரிய வழிவகைகளை செய்வதாக அவா்கள் உறுதியளித்துள்ளனா் என்றாா் அவா்.