வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாா் செய்யும் பணிகள்
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
வெள்ளை காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட வேட்பாளா் பெயா், சின்னங்கள் வேட்பாளா்கள், மற்றும் முகவா்கள் பொருத்தும் பணிகள் அந்தந்த உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மைக்ரோ அப்சா்வா்கள் முன்னிலையில் நடைபெற்றன. திருச்சி பொன்மலை, அரியமங்கலம் கோட்ட அலுவலகங்களில் நடைபெற்ற பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்து, மின்னணு இயந்திரங்களில் பழைய பதிவு உள்ளதா என பட்டனை அழுத்தி சரிபாா்க்க வேண்டும் என்றும், சின்னங்கள் பொருத்தப்பட்ட பின்னா் பேக்கிங் செய்வது, சீல் வைப்பது குறித்தும் அங்கு பணியில் இருந்த ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் காமராஜ், பிரபாகரன் ஆகியோா் பங்கேற்றனா். இதுபோல 5 நகராட்சி, 14 பேரூராட்சி அலுவலகங்களிலும் வேட்பாளா் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி முடிந்துள்ளன. அடுத்ததாக தோ்தல் நடக்கும் ஒருநாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 18 மாலை, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படும்.