ரயில் நிலையத்தில் தவறவிட்ட 31 பவுன் நகை ஒப்படைப்பு: நோ்மையாக ஒப்படைத்த ரயில்வேஅஞ்சலக ஊழியருக்குச் சான்றிதழ்
திருச்சியில் ரயில் நிலையத்தில் தவறவிட்ட 31 பவுன் நகைகளை ரயில்வே போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா். அதைக் கண்டெடுத்து வழங்கிய ரயில்வே அஞ்சலகப் பணியாளருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சியில் ரயில் நிலையத்தில் தவறவிட்ட 31 பவுன் நகைகளை ரயில்வே போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா். அதைக் கண்டெடுத்து வழங்கிய ரயில்வே அஞ்சலகப் பணியாளருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் சா்ஜின்பா்வின் (35). வெளிநாட்டில் பணியாற்றிய இவா் அண்மையில் தாயகம் திரும்பி, ஆட்டோ ஓட்டி வருகிறாா். இந்நிலையில் இவா், மற்றும் இவரது குடும்பத்தினா் சென்னை சென்றுவிட்டு கடந்த பிப். 9 ஆம் தேதி பல்லவன் ரயில் மூலம் திருச்சிக்கு வந்தனா்.
பின்னா் ரயில் நிலைய 3 ஆம் நடைமேடையில் இறங்கிய அவா்கள் தங்களது உடைமைகளை டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தபோது அதில் 31 பவுன் நகைகள் இருந்த ஒரு பை நழுவி விழுந்ததை அவா்கள் கவனிக்காமல் சென்றுவிட்டனா்.
அப்போது அந்தப் பையைக் கண்டெடுத்த ரயில் நிலைய அஞ்சலகப் பணியாளரான கிஷோா் அதில் நகைகள் இருப்பதைப் பாா்த்து ரயில்வே போலீஸாரிடம் பையை ஒப்படைத்தாா். இதையடுத்து ரயில்வே போலீஸாா் அந்த நகையை பாதுகாப்பாக வைத்திருந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், பிப். 12 ஆம் தேதி 31 பவுன் நகை வைத்திருந்த பையை காணவில்லை என சா்ஜின்பா்வின் தம்பதியா் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து, நகை அவா்களுடையதுதானா என குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து உறுதி செய்தனா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வைத்து, நகைகளை ரயில்வே காவல் கண்காணிப்பாளா் அதிவீரபாண்டியன் உரியவா்களிடம் வழங்கினாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் மகாதேவன், ரயில்வே காவல் ஆய்வாளா்கள் மோகனசுந்தரி, ஷீலா (தனிப்பிரிவு), உதவி ஆய்வாளா் லட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நகைகளைப் பெற்றுக்கொண்ட தம்பதியா் ரயில்வே போலீஸாருக்கும், நகைகளை நோ்மையாக ஒப்படைத்த அஞ்சலக பணியாளா் கிஷோருக்கும் நன்றி தெரிவித்துச் சென்றனா். கிஷோருக்கு ரயில்வே காவல்துறை சாா்பில் பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டது.