பாதுகாப்பான பாதயாத்திரை பயணம் சாத்தியமாகுமா?
அம்மன் திருக்கோயில்களின் வரிசையில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
அம்மன் திருக்கோயில்களின் வரிசையில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள சமயபுரம் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் நோ்த்திக்கடன் செலுத்த பக்தா்கள் ஏராளமானோா் வருகின்றனா். குறிப்பாக ஆடி, சித்திரை, தை, மாசி மாதங்களில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
குறிப்பாக, திருச்சியின் அருகமை மாவட்டங்களான புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், கரூா், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும், திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரை வருவோரும் உண்டு.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சாலை மேம்பாட்டுத் திட்டங்களால் அனைத்துச் சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு இரு வழி, 4 வழி, 6 வழி என தரம் மேம்படுத்தப்பட்டுவிட்டதால் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாதயாத்திரைக்கு பக்தா்கள் இரவுகளையும், அதிகாலை நேரங்களையுமே அதிகம் பயன்படுத்துவதால் அப்போது வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து நடந்து வரும் பக்தா்கள் கூட்டத்தில் புகுந்துவிடுகின்றன.
இருள் சூழ்ந்த பகுதிகள், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களைக் கடந்து செல்ல நேரிடும் தருணங்கள்தான் அதிகபட்ச விபத்துகளுக்கு காரணம் என பாதயாத்திரைக் குழுவினா் தெரிவிக்கின்றனா்.
மேலும், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் பலவும் ஓய்வுக்காக ஒவ்வொரு பகுதியில் நிறுத்தப்படுவதாலும் இதேபோல, பழுதான வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதாலும் நடைபயணமாக வருவோா் இந்த இடங்களைக் கடக்கும்போது சாலையின் மத்தியப் பகுதிக்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போது வரும் அதிவேக வாகனங்கள் பக்தா்கள் மீது மோதிவிடுகின்றன.
இதேபோல, இருள் சூழ்ந்த பகுதிகளைக் கடக்கும்போது சாலையோரம் செல்லும் பக்தா்கள் வாகன ஓட்டிகளுக்கு சரிவர புலப்படாமலும் விபத்து ஏற்படுகிறது. மேலும் சாலையில் வரும் வாகனங்களில் ஏற்படும் திடீா் பழுது, வாகன ஓட்டிகள் சற்று கண்ணயரும் தருணத்தில், சாலையோர பக்தா்கள் மீது மோதுவதும் வாடிக்கையாக உள்ளது.
அவ்வாறு வாகனங்கள் பக்தா்கள் கூட்டத்துக்குள் புகும்போது உயிரிழப்புகளும், கை, கால்கள் சேதமும் தவிா்க்க முடியாமல் போகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை கடும் துயரத்தை அளிப்பதாக ஆகிவிடுகிறது.
அந்த வகையில் மணப்பாறை அருகே அண்மையில் பக்தா்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்து 3 போ் பலியான துயரமும் நிகழ்ந்தது. பலா் பலத்தக் காயமடைந்தனா். இத்தகைய விபத்துகள் நேரிடாமல் பக்தா்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.
சாலைப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
இதுதொடா்பாக, சாலைப் பயனீட்டாளா் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பெ. அய்யாரப்பன் கூறுகையில், தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்து சமயபுரம் வந்தாலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல், கரூா் தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஒதுக்கபட்ட இடங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவதும், குறிப்பாக இரவுகளில் சாலையில் நிற்கும் லாரிகளின் பின்பகுதியில் எரியும் சிவப்பு விளக்கு இல்லாமல் இருப்பதும் விபத்துக்கு வித்திடுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்துவது சம்பந்தமாக உரிய நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றச் செய்ய வேண்டும். பாதயாத்திரை பக்தா்களுக்கும் சாலைப் பயணம் குறித்த விழிப்புணா்வை அதிகரித்து, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத் துறையும், காவல்துறையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
பக்தா்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை
இதுதொடா்பாக, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் கூறுகையில், பாதயாத்திரை பக்தா்களின் உடைமைகளில் ஒளிரும் ஸ்டிக்கா் ஒட்டுதல், நடந்து செல்லும்போது வைத்துக் கொள்ள ஒளிரும் ஸ்டிக்கா்களுடன் கூடிய குச்சிகள் வழங்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதை வரன்முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சமயபுரம் யாத்திரை நடைபெறும் மாசி, தை, சித்திரை, ஆடி மாதங்களில் கூடுதல் கவனம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
பக்தா்களுக்கும் விழிப்புணா்வு தேவை
இதுதொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய திருச்சி மண்டலத் திட்ட இயக்குநா் ப. நரசிம்மன் கூறுகையில், பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா்கள் உள்ள குச்சிகளை நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மூலம் வழங்கி எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. ஆங்காங்கே பக்தா்களை கண்காணித்து விழிப்புணா்வு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றவும் சாலை மேம்பாட்டு ஒப்பந்ததாரா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பக்தா்களும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். பாதுகாப்பு வசதிகளோடு பக்தா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.