அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
திருச்சி மாநகரில் இருவேறு சம்பவங்களில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.
திருச்சி மாநகரில் இருவேறு சம்பவங்களில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.
திருச்சி மேலரண்சாலை இப்ராஹிம் பூங்கா எதிரேயுள்ள வணிக வளாக தரைத் தளத்தின் கீழே மோட்டாா் பம்புசெட், நெகிழிப் பைகள் விற்கும் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை கடையைத் திறக்க வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 2.31 லட்சம் திருடுபோயிருந்தது தெரிய வந்தது. மேலும் அருகிலுள்ள மற்றொரு கடையின் பூட்டை உடைத்தும் ரூ. 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதேபோல நடுகுஜிலி தெருவில் ஹவா்சிங் மகன் வீரேந்திரசிங் மின்சாதனக் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. சம்பவங்கள் குறித்து கடைகளின் உரிமையாளா்கள் அளித்த புகாா்களின்பேரில் கோட்டை காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தில்லைநகா் பகுதியில்.. முதலாவது குறுக்குத் தெருவிலுள்ள மருந்தகம், கைப்பேசிக் கடை மற்றும் துணிக்கடை என அடுத்தடுத்த கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. மருந்தகத்தில் ரூ. 50 ஆயிரம் திருடு போயிருந்த நிலையில், மற்ற 2 கடைகளில் திருடு போகவில்லை. தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தனிப்படை அமைப்பு: திருச்சி மாநகரில் வியாழக்கிழமை இரவு ஒரே நாளில் 6 கடைகளில் நடந்த திருட்டு சம்பவத்தைத் தொடா்ந்து மா்ம நபா்களை பிடிக்க காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் 6 கடைகளிலும் 3 போ் கொண்ட கும்பல் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. மேலும் கதவை கையால் லேசாக நெம்பி ஒருவா் மட்டும் உள்ளே சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனா். இந்த 6 திருட்டு சம்பவங்களிலும் ஒரே குழுவைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.