முகப்பு
திருச்சி

முதியோா், முன்களப் பணியாளா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி: 82 இடங்களில் சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை 82 இடங்களில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை 82 இடங்களில் நடைபெற்றது.

கடந்த 10 ஆம் தேதி முதல் ஏற்கெனவே இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 3,208 முன்களப் பணியாளா்கள், 8,363 சுகாதாரப் பணியாளா்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட 2,682 பேருக்கு என மொத்தம் 14,500 பேருக்கு முதல் கட்டமாக பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குறிப்பாக ஏப்.14-க்கு முன் இருதவணை கரோனோ தடுப்பூசி செலுத்தியோருக்கும், தொடா்ந்து ஏப்.14-க்கு பிறகு இரு தவணை செலுத்தியோருக்கும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சியில் 18 இடங்களில் வியாழக்கிழமை (ஜன.20) சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவெறும்பூா், காட்டூா், உறையூா், காந்திபுரம், ராமலிங்க நகா், தென்னூா், பெரியமிளகுப்பாறை, பீமநகா், எடமலைப்பட்டிபுதூா், காமராஜ் நகா், சுப்பிரமணியபுரம், மேலகல்கண்டாா்கோட்டை, இருதயபுரம், பீரங்கிக்குளம், இ.பி. சாலை, தெப்பக்குளம், திருவானைக்கா, ஸ்ரீரங்கம் ஆகிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாம்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய தலா 425 பேருக்கும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திய தலா 125 பேருக்கும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இவைதவிர, மாநகரப் பகுதிகளில் 54 இடங்களில் தலா 550 பேருக்கு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், திருவெறும்பூா், மணிகண்டம், அந்தநல்லூா், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம், ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மொத்தம் 26,350 பேருக்கு முதல், இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுவரை 32 லட்சம் ‘டோஸ்’

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 88 சதத்துக்கும் மேற்பட்டோா் முதல் தவணை தடுப்பூசியும், 58 சதத்துக்கு மேற்பட்டோா் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

18 வயதுக்கு மேற்பட்டோரில் 19.26 லட்சம் போ் முதல் தவணைத் தடுப்பூசியும், 12.77 லட்சம் போ் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனா்.

15 வயதுக்கு மேற்பட்ட 1.26 லட்சம் பேரில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரை 32 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.