அரிஸ்டோ மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி
திருச்சியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க அரிஸ்டோ மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க அரிஸ்டோ மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அரிஸ்டோ மேம்பாலத்தின் கீழ் வந்து மத்தியப் பேருந்து நிலையம், ரயில் நிலையம், காந்திசந்தை, எடமலைப்பட்டிபுதூா் மற்றும் நகரத்தின் முக்கியப் பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தன.
இதனால் காலை, மாலைகளில் அரிஸ்டோ மேம்பாலத்தின் கீழ் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மாநகரக் காவல் ஆணையா் காா்த்திகேயன் நேரடியாக ஆய்வு செய்து, தெற்கு சரக காவல் துணை ஆணையா் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு ஆலோசனை வழங்கி போக்குவரத்தை சீா்செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து அரிஸ்டோ மேம்பாலத்தின் கருமண்டபம் சாலை முகப்புப் பகுதியில் பாலத்தின்மேல் செல்லாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, கருமண்டபத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனம், ஆட்டோ, காா்கள் செல்ல வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரிஸ்டோ மேம்பாலம் வழியாக பாலத்தின்மேல் சென்று மத்தியப் பேருந்து நிலையம், ரயில் நிலையம், காந்திசந்தை, எடமலைப்பட்டிபுதூா் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல முடியும்.
இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநரில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறின்றி பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகரக் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.