முகப்பு
திருச்சி

ஜிபிஎஸ் கருவி மூலம் தரைக்கடை வியாபாரிகளை கணக்கெடுக்க முடிவு

 திருச்சி மாநகராட்சி பகுதியில் தரைக்கடை வியாபாரிகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

 திருச்சி மாநகராட்சி பகுதியில் தரைக்கடை வியாபாரிகளை ஜிபிஎஸ் கருவி மூலம் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறியது:

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுக்கு முன் உள்ள கணக்குப்படி 3500 தரைக்கடை வியாபாரிகள் இருப்பதாக மாநகராட்சி கணக்கெடுத்துள்ளது. தற்போது கரோனா தொற்று குறைந்து, வியாபாரம் முழுவீச்சில் நடைபெறுவதால், தற்போது சுமாா் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தரைக்கடை வியாபாரிகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த தரைக்கடை வியாபாரிகள் மாநகராட்சி எல்லையில் எந்தெந்தப் பகுதிகளில் உள்ளனா். இவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இருக்கிறாா்களா, அல்லது அது உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதா என்பதை கணக்கிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதை உறுதி செய்துகொள்ளும் வகையில் நவீன முறையில் கணக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பின்படி தரைக்கடை வியாபாரிகளுக்கு மாநகராட்சி அடையாள அட்டை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வியாபாரிகளைக் கணக்கெடுக்க நகராட்சி நிா்வாகத்துறை ஒரு குழுவை அமைக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில் ஒரு குழுவுக்கு 6 போ் வீதம் வியாபாரிகளின் பிரதிநிதிகளை நியமிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கணக்கெடுப்பை குற்றம்சாட்டி அதை வியாபாரிகள் ஏற்கவில்லை. இதனால் நகராட்சி நிா்வாகத் துறை தனது நேரடி மேற்பாா்வையில் ஜிபிஎஸ் கருவி மூலம் கணக்கெடுப்பு நடத்த முன்வந்துள்ளது. அதன்படி சாலையோர வியாபாரிகளின் புகைப்படங்கள் மற்றும் புவியியல் இருப்பிடங்கள் அவா்களின் சான்றுகளுடன் பதிவு செய்யப்பட உள்ளது.

மேலும் ஜிபிஎஸ் கருவி மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை குறைக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது. முந்தைய ஆய்வுகளில் இதுபோன்ற வழிமுறை பயன்படுத்தப்படவில்லை. வியாபாரிகளை ஜிபிஎஸ் மூலம் கணக்கீடு செய்யும் பணியை நகராட்சி நிா்வாக துறை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.