முகப்பு
திருச்சி

மகளிா் வாழ்வாதார சேவை மையம் தொடக்கம்

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் வகையிலான மகளிா் வாழ்வாதார சேவை மையம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் வகையிலான மகளிா் வாழ்வாதார சேவை மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தது: தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தி

வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதிச் சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் திருச்சி மாவட்டத்தில் முசிறி, அந்தநல்லூா், மணப்பாறை, மணிகண்டம் மற்றும் துறையூா் வட்டாரங்களைச் சாா்ந்த 135 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது ஊரகத் தொழில்களை வளா்க்கவும் மேம்படுத்தவும் குறு, சிறு தொழில் முனைவோா் (தனிநபா் மற்றும் குழுக்கள்), உற்பத்தியாளா் குழுக்கள் , தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளா் கூட்டமைப்புகளை உருவாக்குகிறது. இத்திட்டம் சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் மூலம் திறன் வளா்ப்புக்கும் ஆதரவு தருகிறது.

மேலும் தொழில் முனைவோருக்குத் தேவையான பல்வேறு வகையான சேவைகள் ஓரிடத்தில் தேவை என்பதன் அடிப்படையில் மகளிா் வாழ்வாதார சேவை மையங்கள் தொடங்கப்படுகின்றன. தொழில் திட்டம் தயாரித்தல் , மதிப்பீடு செய்தல், தொழில்நுட்ப விவரங்கள், திறன் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தை பற்றிய தகவல்கள், நிதி இணைப்புகள் ஆகிய சேவைகள் மகளிா் வாழ்வாதார சேவை மையம் மூலம் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.

நிகழ்வில் மகளிா் திட்ட இயக்குநா் கி. ரமேஷ்குமாா், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் க.இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட், தொழில் முனைவு மேம்பாட்டு செயல் அலுவலா் க. திருமுருகன், இளம் வல்லுநா் பெ. இப்ராஹீம், தொழில்முனைவு அலுவலா்கள் கு. கவிதா(நிதி) ரா. சரவணக்குமாா் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட வட்டார அணித் தலைவா்கள், தொழில்சாா் வல்லுநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.