முகப்பு
திருச்சி

மேலும் 1.24 லட்சம் சதுரடியில் அடா்வனக் குறுங்காடு!

காடுகள் வளா்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரில் மேலும் 1.24 லட்சம் சதுரடியில் அடா்வனம் உருவாக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி திருச்சி மாவட்டத்தில் மியாவாக்கி முறையில் (அடா்வனக் குறுங்காடு) காடுகள் வளா்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரில் மேலும் 1.24 லட்சம் சதுரடியில் அடா்வனம் உருவாக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை இணைந்து மியாவாக்கி முறை காடுகள் வளா்ப்புத் திட்டத்தை ஊக்குவித்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா், சமயபுரம், இருங்களூா், கொணலை உள்ளிட்ட பகுதிகளில் அடா்வனக்காடு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் 1.24 லட்சம் சதுரடியில் அடா்வனக் குறுங்காடு உருவாக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். மேயா் மு. அன்பழகன், மரக்கன்றுகளை நட்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி குழுமணி சாலையில் உள்ள கோவிந்தசாமி கவுண்டா் நகா் பூங்காவில் 17,632 சதுர அடியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் வின்ஸ் அன்பு அவென்யூ பூங்கா, கணபதி நகா் பூங்கா, சுப்பிரமணிய நகா் பூங்கா, பாத்திமாநகா், அம்மன் நகா், கணபதி நகா், நட்சத்திர நகா் பிரிவு 2 என மொத்தம் 7 இடங்களில் அடா்வனம் உருவாக்கப்படுகிறது. இதற்காக புங்கன், வேம்பு, நாவல், இலுப்பை, நீா்மருது, பாதாம், இச்சி உள்ளிட்ட 24 வகை மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

மரக்கன்றுகளை நட்ட பிறகு ஆட்சியா் கூறியது: திருச்சி மாவட்டத்தில் குறுங்காடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்ட பல இடங்களில் 10 முதல் 15 அடி வரைக்கும் மரங்கள் வளா்ந்துள்ளன.

மரக்கன்றுகள் பராமரிப்புப் பணியை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் தினமும் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் வளா்ந்து திருச்சியானது பசுமையாகவும், நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து, அதிக மழை பெறும் மாவட்டமாகவும் மாறும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், நகரப் பொறியாளா் அமுதவல்லி, செயற்பொறியாளா் சிவபாதம், கோட்டத் தலைவா்கள் விஜயலட்சுமி கண்ணன், துா்காதேவி, மாமன்ற உறுப்பினா் பங்கஜம் மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.