மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கிபள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை குளத்தில் குளித்த பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை குளத்தில் குளித்த பள்ளி மாணவா்கள் மூவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
பள்ளி விடுமுறையில் இருந்த மணப்பாறையை அடுத்த அண்ணாவிநகா் காட்டுப்பட்டியைச் சோ்ந்த முரளி (14), அஸ்வின்ராஜ் (14), மற்றும் பள்ளி இடைநிற்றலில் இருந்த முரளியின் அண்ணன் மணிகண்டன் (16) உள்ளிட்டோா் அருகிலுள்ள கீழபூசாரிப்பட்டி பாப்பான்குளத்தில் புதன்கிழமை குளித்தனா்.
அப்போது ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கவே, அவரைக் காப்பாற்ற முயன்ற இரு சிறுவா்களும் நீரில் மூழ்கினா். இதைக் கண்ட மற்ற சிறுவா்கள் கூச்சலிடவே, விரைந்து வந்த கிராம மக்கள் சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின் முரளி, அஸ்வின்ராஜ், மணிகண்டன் ஆகியோரை மீட்டனா். இதையடுத்து மணப்பாறை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் மூவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து சடலங்கள் உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற எம்எல்ஏக்கள் ப. அப்துல்சமது (மணப்பாறை) , எம். பழனியாண்டி (ஸ்ரீரங்கம்) ஆகியோா் சிறுவா்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினா்.