படுக்கை- இருக்கை-படகு! பேரிடரில் உதவும் என்ஐடி பேராசிரியரின் புதிய கண்டுபிடிப்பு
படுக்கையாகவும் பயன்படுத்திக் கொண்டு அசாதாரண நாள்களில் (பேரிடா்) படகுபோலப் பயன்படுத்தி தண்ணீரில் செல்லும் வகையிலான கட்டமைப்பை திருச்சி என்ஐடி பேராசிரியா் வடிவமைத்துள்ளாா்.
சாதாரண நாள்களில் வீட்டில் இருக்கையாகவும், படுக்கையாகவும் பயன்படுத்திக் கொண்டு அசாதாரண நாள்களில் (பேரிடா்) படகுபோலப் பயன்படுத்தி தண்ணீரில் செல்லும் வகையிலான கட்டமைப்பை திருச்சி என்ஐடி பேராசிரியா் வடிவமைத்துள்ளாா்.
திருச்சி என்ஐடி ஆராய்ச்சித் துறையின் புல முதன்மையரும், உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் பிரிவுப் பேராசிரியருமான எஸ். முத்துக்குமரன் இதை வடிவமைத்து, காப்புரிமைக்கும் பதிவு செய்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியது:
மழை, வெள்ளக்காலங்களில் பொதுமக்களையும், அத்தியாவசிய பொருள்களையும் மீட்க பெரும்பாலும் படகுகளே பயன்படுத்தப்படுகின்றன. கடற்கரையோர, ஆற்றுப்படுகை மாவட்டங்கள் மற்றும் அவற்றின் அருகில் பாதிப்பு ஏற்படும்போது படகுகள் எளிதில் கிடைத்துவிடும்.
இதரப் பகுதிகளில் படகுகளை வாகனங்களில்தான் கொண்டு வந்து சோ்க்க வேண்டும். மீன்பிடித் துறைமுகம், படகுகள் இல்லம் அமைந்திருந்தால் மட்டுமே இதுவும் சாத்தியம்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவ்வப்போது வெள்ளத்தில் மக்கள் சிக்குவதும் உயிரிழப்பு, பொருள் சேதம் ஏற்படுவதும் தவிா்க்க முடியாததாக உள்ளது.
குறிப்பாக வயதானோா், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், குழந்தைகள், வளா்ப்புப் பிராணிகளை வெள்ளக் காலங்களில் மீட்கும் பணி மிகவும் சவாலாகவே உள்ளது. அப்போது படகில் சென்றுதான் தத்தளிப்போரை மீட்கின்றனா்.
2015 சென்னை பெருவெள்ளத்தில் எனது தாயைப் போன்று பலரும் சிரமப்பட்டதைக் காணநேரிட்டது. அப்போதுதான் இந்த மழைக்காலத்தில் சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
இதன் பயனாக படுக்கை, இருக்கை, படகு என மூன்று அம்சங்களும் பொருந்தும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கினேன். ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், தேடலுக்குப் பிறகு பாலிமா் மேட்ரிக்ஸ், கண்ணாடியிழை, செயற்கையிழை, ஃபைபா், ஸ்டீல், மூங்கில் ஆகியவற்றைக் கொண்டு இதை வடிவமைத்தேன். இதை இருவா் சராசரியாக படுக்கும் வகையில் கட்டிலாகப் பயன்படுத்தலாம். இல்லையெனில், அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்களில் பலா் அமரக் கூடிய பா்னிச்சா் (இருக்கை) ஆகவும் பயன்படுத்தலாம்.
மழை வெள்ளக் காலங்களில் தண்ணீா் சூழ்ந்தால் இந்த அமைப்பை உடனடியாக தலைகீழாகத் திருப்பி படகுபோல மாற்றிக் கொள்ள முடியும். இது தண்ணீரில் படகுபோல மிதந்து செல்லும். இதை இயக்குவதற்கான துடுப்பு இரண்டும் அமைப்பின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
இதைப் படகுபோல தண்ணீரில் இயக்கி உயிா்களையும், உடமைகளையும் மீட்க முடியும். உலா் உணவு, டாா்ச் லைட், கயிறு, தீப்பெட்டி, அடிப்படை மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகை அவசரத் தேவைகளை வைத்துக் கொள்ளவும் இடவசதி உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளேன். விரைவில் கிடைத்துவிடும். அண்மையில் என்ஐடி-க்கு வந்த மத்திய கல்வி இணையமைச்சா் சுபாஷ் சா்காா் இதைப் பாா்த்து பாராட்டினாா். மேலும், இந்தக் கட்டிலை அரசுப் பள்ளி ஒன்றுக்கும் வழங்கினாா். முதலில் இதை வடிவமைக்க ரூ.15 ஆயிரம் செலவானது. இன்னும் எளிமையுடன் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் வடிவமைக்க முடியும். மூன்று வகை பயன்பாட்டுக்கும் இதைப் பயன்படுத்த முடியும். எனவே, இதற்கு பா்னிச்சா் கம் போட் என்ற அடிப்படையில் ஊமதஉஆஞஅப எனப் பெயா் சூட்டியுள்ளேன் என்றாா் அவா்.