முகப்பு
திருச்சி

பொதுசிவில் சட்டத்தை தமிழக அரசு எதிா்க்க வேண்டும்: தமுமுக செயற்குழுவில் வலியுறுத்தல்

பொதுசிவில் சட்டத்தை தமிழக அரசு தொடா்ந்து எதிா்க்க வேண்டும் என திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

பொதுசிவில் சட்டத்தை தமிழக அரசு தொடா்ந்து எதிா்க்க வேண்டும் என திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி என்.எம்.கே. காலனி பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமுமுக தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலரும், மணப்பாறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ப. அப்துல்சமது, தமமுக பொதுச் செயலா் ஹாஜாகனி, மாநில பொருளாளா்கள் சபியுல்லாஹ் கான், கோவை உமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் செயல் அறிக்கைகள், வரவு செலவு கணக்குகள், அமைப்பு விதிகளில் திருத்தம் மற்றும் புதிய விதிகளை சோ்ப்பது என பல்வேறு பொருள்களில் விவாதங்கள் நடைபெற்றன.

பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மத்திய அரசு எவ்வித மாற்றமும் கொண்டு வரக் கூடாது. இதற்கு தமிழக அரசு எந்தவகையிலும் துணை நிற்கக் கூடாது என கூட்டத்தில் பேசிய நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் ஹிந்தியை திணிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இறுதி செய்யப்பட்டன. இந்தத் தீா்மானங்கள் அனைத்தும் சமயபுரம் அருகே சனிக்கிழமை நடைபெறும் தலைமை பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

தலைமை செயற்குழுக் கூட்டத்தில் திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது, திருச்சி கிழக்கு மாவட்ட தலைவா் முகமது ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.