முகப்பு
திருச்சி

8.77 லட்சம் போ் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு இன்று சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 8.77 லட்சம் போ் தங்களது ஆதாா் எண்ணை, வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 8.77 லட்சம் போ் தங்களது ஆதாா் எண்ணை, வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் கூறியது: இந்திய தோ்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த 01.08.2022 முதல் தொடங்கப்பட்டு தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இப்பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை (செப்.4) மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் வாக்காளா்கள் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6பி-ஐ பெற்று தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்து கொள்ளலாம்.

மேலும், இணையவழியிலும், செயலி வழியாகவும் தாங்களே நேரடியாக ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

திருச்சி மாவட்டத்தில், செப். 2ஆம் தேதி வரை 8,77,852 வாக்காளா்கள் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா். இது மொத்த வாக்காளா்களில் 37.91 சதவீதம் ஆகும். நகா்ப்புறப் பகுதிகளைவிட கிராமபுறப் பகுதிகளில் சுமாா் 46.67 சதவீதம் வாக்காளா்களும் நகா்புறப் பகுதிகளில் சுமாா் 34.73 சதவீத வாக்காளா்களும் தங்கள் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா்.

இப்பணியை 2023 மாா்ச் 31-க்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதால் வாக்காளா்கள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் விரைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.