திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புத்தகச் சுவா் திறப்பு
திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் புத்தகச் சுவா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட
திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் புத்தகச் சுவா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் இந்த சுவரைத் திறந்து வைத்தனா்.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, பொதுமக்கள் தாங்கள் வாசித்த நல்ல நூல்களையும், நேசிக்கும் புதிய நூல்களையும் தாமாக முன்வந்து நன்கொடையாக புத்தகச் சுவருக்கு வழங்கலாம். இவை அனைத்தும் கிராமப்புற நூலகங்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சா்கள் தெரிவித்தனா்.
தொடா்ந்து சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உண்டியல்களை வழங்கிய அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி புத்தகத் திருவிழா தொடா்பான இலச்சினையை வெளியிட்டனா்.
மேலும் குடிநீா் கேன்கள், பேருந்துகளில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை அமைச்சா்கள் ஒட்டினா். இதைத் தொடா்ந்து, ஆட்சியரகத்திலிருந்து அனுப்பப்படும் அனைத்துக் கடிதங்களிலும் புத்தகத் திருவிழா குறித்த விளம்பரம் முத்திரையிடப்பட்டு அனுப்பும் நடவடிக்கைகளையும் அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்.
நிகழ்வுகளில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மேயா் மு. அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ.செளந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமாா், எம். பழனியாண்டி, மாநகரக் காவல் ஆணையா் க.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் இரா.வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.அபிராமி, மாவட்ட நூலக அலுவலா் அ.பொ.சிவகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே.பிச்சை, ஊராட்சிகள் உதவி இயக்குநா் கங்காதாரணி, அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.