பணிக்குச்சென்ற காவலா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருச்சி அருகே பணிக்குச் சென்ற காவலா், மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி அருகே பணிக்குச் சென்ற காவலா், மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை அருகிலுள்ள வாழையூா்மேடு கிழக்குப் பகுதியைச் சோ்ந்தவா் பெ. ராமகிருஷ்ணன் (28). இவா் வாய்த்தலை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
செப்டம்பா் 2 -ஆம் தேதி பணிக்குச் சென்ற ராமகிருஷ்ணன், விநாயகா் சிலைகள் ஊா்வலம், கரைப்பு தொடா்பான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். சனிக்கிழமை காலை அதிகாலை வீடு திரும்பிய இவா், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் காவல் நிலையம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
பேட்டைவாய்த்தலை-திருச்சி சாலையில் திருமண மண்டபம் அருகே வந்த போது, ராமகிருஷ்ணனுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் வண்டியிலிருந்து இறங்கிய அவா் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து அங்கிருந்தவா்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். நிகழ்விடம் விரைந்த காவலா்கள் ராமகிருஷ்ணனை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பேட்டைவாய்த்தலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.