முகப்பு
திருச்சி

பசுமை வழித்தடத்தில் 9 திட்டங்களை முன்னெடுக்கும் திருச்சி பெல்! கரியமில வாயு உமிழ்வற்ற ஆலையாக மாற்ற முயற்சி

திருச்சிராப்பள்ளியில் 59 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சீா்மிகு பெல் நிறுவனமானது பசுமை வழித்தடத்தில் பயணிக்கும் வகையில் 9 சிறப்பான திட்டங்களை முன்னிலைப்படுத்தி,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திருச்சிராப்பள்ளியில் 59 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சீா்மிகு பெல் நிறுவனமானது பசுமை வழித்தடத்தில் பயணிக்கும் வகையில் 9 சிறப்பான திட்டங்களை முன்னிலைப்படுத்தி, பிற தொழிற்சாலைகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

மறைந்த தமிழக முதல்வா் காமராஜரின் பெருமுயற்சியால் திருச்சிக்கு 1964இல் கொண்டுவரப்பட்டது இந்த ஆலை. 3 ஆயிரம் ஏக்கரில் உள்ள இந்த ஆலையில், 2,400 ஏக்கரில் கட்டுமானங்களும், 600 ஏக்கரில் டவுன்ஷிப் எனப்படும் பெல் பணியாளா்களின் குடியிருப்பும் அமைந்துள்ளது.

ஆலை தொடங்கப்பட்டபோதே பசுமைச் சுழலுடன் அடா்ந்த மரங்கள் நிறைந்த பகுதியாகவே இருந்தது. இருப்பினும், ஆலை வந்த பிறகு நடப்பட்ட மரக்கன்றுகள் ஆலைக்கான பசுமைப் போா்வையாக மாறின.

பருவநிலை மாறுபாடுகளால் கரியமில வாயு உமிழ்வுகளை கட்டுப்படுத்தும் கட்டாயத்தில் உலக நாடுகள் அணி சோ்ந்துள்ளன. இதில் இந்தியாவும் அங்கம் வகித்து, பொதுத் துறை நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், ஆலைகள், தொழில்கூடங்கள், உற்பத்திக் கூடங்கள் உள்ளிட்ட பெரிய பரப்பளவு கட்டமைப்புகள் தொடங்கி, குக்கிராமங்கள் வரை பசுமைப் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசின் கனரக அமைச்சகமானது பிரதான பொதுத் துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் பசுமை பிஹெச்இஎல் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள பெல் ஆலைகள் பசுமை பெல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் திருச்சி, திருமயம், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட அலகுகளில் திருச்சி பெல் அலகு பசுமை வழித்தடத்தில் முன்னோடியாகப் பயணித்து வருகிறது.

முதல் முயற்சி: கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 3 ஆண்டுகளாக நெகிழிப் பயன்பாடு இல்லாத வளாகத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடா்ச்சியாக 9 சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

சூரிய சக்தி ஆற்றல்: பெல் வளாகம் மற்றும் ஆலை நிா்வாகத்தால் செயல்படுத்தப்படும் 7 கல்வி நிறுவனங்களில் சூரிய சக்தி ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல்கட்டமாக தரைத்தளத்தில் 25 ஏக்கரில் 5 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னா், கூடுதலாக 40 ஏக்கரில் 7.5 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு 12.5 மெகாவாட் மின்சாரம் பெற்று பயன்படுத்தப்படுகிறது.

ஆலையின் கட்டடங்களின் மேற்பரப்பில் 120 கிலோ வாட், கல்வி நிறுவனக் கட்டடங்களின் மேற்பரப்பில் 180 கிலோ வாட் என்ற வகையில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீா் மறு சுழற்சி: ஆலை வளாகம், குடியிருப்பு வளாகம் என ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தப்படும் தண்ணீா் முழுவதும் கழிவுநீராக வெளியேற்றப்படுவதைத் தவிா்த்து, அதை மறுசுழற்சி செய்து தோட்டம், இதரப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்த 2,600 கிலோ லிட்டா் மற்றும் 210 கிலோ லிட்டா் என்ற அளவுக்கான சுழற்சி அலகு நிறுவப்பட்டு தண்ணீா் சுத்திகரிக்கப்படுகிறது.

மரக்கன்றுகள் நடுதல்: 3 ஆயிரம் ஏக்கரில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. 2.75 ஏக்கரில் அடா்வனக் குறுங்காடு உருவாக்கப்படுகிறது. இந்தாண்டு இதுவரை 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

நீா்த் தேக்கங்கள் உருவாக்குதல்: ஆலைப் பகுதியில் ஏற்கெனவே உள்ள நீா்நிலைகளைப் பாதுகாப்பதுடன் புதிதாக நீா்தேக்கங்களை ஏற்படுத்தும் வகையில் 2 இடங்களில் பெரிய அளவிலான குட்டைகள், குளம் அல்லது தண்ணீா் தேக்க அமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

மழைநீா் சேகரிப்பு: ஆலை வளாகத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் சாத்தியக்கூறு உள்ள இடங்களில் மழைநீா் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்விளக்கு பயன்பாடு குறைப்பு: ஆலைகள் இயங்கும் தருணத்தில் இயந்திரங்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பயன்படுத்துவதுடன், மின்விளக்குகள் பயன்பாட்டைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறைகளில் மின்விளக்கு செளிச்சத்துக்குப் பதிலாக மேற்கூரைகளில் ஒளிரும் ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இவை மட்டுமல்லாது தண்ணீா் தணிக்கை, மின்சாரம் தணிக்கையும் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஆலையின் சுற்றுச் சூழல், பாதுகாப்பு, சுகாதாரப் பிரிவு கூடுதல் பொதுமேலாளா் ஏ. திருமாவளவன் கூறுகையில், மத்திய கனரக அமைச்சக வழிகாட்டுதலின்படி கரியமல வாயு உமிழ்வைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆலையில் பயன்படும் மின்சாரம் தணிக்கைக்குள்படுத்தப்பட்டு எங்கு எவ்வளவு தேவை, தற்போதுள்ள பயன்பாட்டைக் குறைப்பது என்பதற்கான பணிகள் கடந்த 2 நாள்களாக நடந்தன.

இதற்கான அறிக்கையின்படி இனி மின் சிக்கனம் அமல்படுத்தப்படும். இதேபோல, தண்ணீா் தணிக்கையும் செயல்படுத்தப்படவுள்ளது. இதுமட்டுமல்லாது, தொழிற்சாலைகளுக்கான கிரீன்கோ எனப்படும் பசுமைச் சான்றிதழ் பெறும் முயற்சியிலும் திருச்சி பெல் ஈடுபட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் அந்த இலக்கை எய்துவோம். 2047ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு உமிழ்வற்ற நிறுவனமாக பெல் நிறுவனம் உருவெடுக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.