தமிழ்நாட்டில் ஏழு முனைப் போட்டியா?
தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஏழு முனைப் போட்டி பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை ஐந்து முனைப் போட்டி நிலவிய நிலையில், தற்போது ஏழு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வருகின்ற திங்கள்கிழமை (மார்ச் 30) முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளன.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டது.
இவற்றில், திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியைத் தவிர மற்ற மூவரும் ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.
மேலும், திமுக கூட்டணி 45.38%, அதிமுக கூட்டணி 39.71%, நாம் தமிழர் கட்சி 6.58%, அமமுக கூட்டணி 2.85%, மநீம கூட்டணி 2.73% வாக்குகள் பெற்றன.
பிற கூட்டணியின் ஆதரவின்றி தனிப் பெரும்பான்மையுடன் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் என்னென்ன?, தவெக ஏதேனும் கூட்டணியில் இணையுமா? அல்லது புதிய கூட்டணியை உருவாக்குமா?, தேமுதிக, அமமுக எந்தக் கூட்டணியில் சேரப் போகிறது? என அடுக்கடுக்கான கேள்விகள் இருந்தன.
இந்த நிலையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்கின்றன. புதிய வரவாக தேமுதிக இணைந்துள்ளது.
மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இவ்விரு கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடுகள் நிறைவுபெற்று ஒப்பந்தமும் கையொப்பமாகிவிட்டது.
புதிதாக கட்சித் தொடங்கி முதல்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முயற்சித்த நிலையில், தற்போது தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கியுள்ளது.
ஒரு வாரம் முன்பு வரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியாகவே கருதப்பட்டது. இதனிடையே புதிதாக அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய சசிகலா, தைலாபுரம் சென்று ராமதாஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களை ராமதாஸ் பாமகவும் அபுமமுகவும் இணைந்து சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 5 முனைப் போட்டியாக மாறியது.
இந்த நிலையில், தென் தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்கு வங்கியை வைத்திருக்கும் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சிக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்ததால் தே.ஜ. கூட்டணியில் இணைய கிருஷ்ணசாமி மறுத்துவிட்டார்.
தென் தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட சுமார் 100 -க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் திமுக கூட்டணியில் இருந்து விலகிய வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு கடும் சவாலாக மாறியிருக்கும் விஜய்யும், 8 சதவிகித வாக்குகளை வைத்துள்ள சீமானும் பலமான போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர்.
இவர்களுக்கு மத்தியில் போட்டியிடும் தொகுதிகளில் தங்கள் சமூதாயத்தைச் சார்ந்த வாக்குகளைப் பிரித்து திமுக, அதிமுகவின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக ராமதாஸ் - சசிகலா, கிருஷ்ணசாமி, வேல்முருகன் மாறுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!