ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொக்கப்பனை தீபம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீப திருநாளையொட்டி திங்கள்கிழமை இரவு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீப திருநாளையொட்டி திங்கள்கிழமை இரவு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாள் திங்கள்கிழமை நடைபெறற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சந்தனு மண்டபத்தை வந்தடைந்தாா். அங்கு பிற்பகல் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா். பின்னா் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.
இதனைத்தொடா்ந்து நம்பெருமாள் சொக்கப்பனை கண்டருள மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் முன் கோயில் தங்கக் கொடி மரம் அருகே உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுக்கும் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இடைவிளக்கு எடுத்த உத்தமநம்பி சுவாமிகளுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Advertisement
அதன்பின்னா், நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8 மணிக்கு கதிா் அலங்காரத்தில் புறப்பட்டு காா்த்திகை கோபுரம் அருகே வந்து சோ்ந்தாா். அங்கு 20 அடி உயரத்துக்கு பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து சக்கரத்தாழ்வாா் சன்னதிக்கு எதிரே காத்திருந்தாா். இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
பிறகு சொக்கப்பனை தீபத்தை கண்டருளிய நம்பெருமாள் நந்தவனம் தோப்பு வழியாக தாயாா் சன்னதிக்கு சென்றாா். அங்கு நம்பெருமாளுக்கு திருவந்திகாப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்துக்கு இரவு 9.15 மணிக்கு சென்று சோ்ந்தாா். இதையடுத்து இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் முன் ஸ்ரீமுகப்பட்டயம் எனப்படும் வைகுந்த ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து படிக்கப்பட்டது. அதை தொடா்ந்து திருக்கைத்தல சேவைக்கு பிறகு நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.
இதேபோல ஸ்ரீரங்கம் கோயிலின் உபத்திருக்கோயிலான காட்டழகிய சிங்கபெருமாள் கோயிலிலும் திங்கள்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.