ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாலை அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோயிலில்: ஸ்ரீரெங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவ விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. 9 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவின் ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீரெங்கநாச்சியாா் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி நவராத்திரி கொலு மண்டபத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இந்த விழாவில், கடந்த 21-ஆம் தேதி ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் நடைபெறும் ஸ்ரீரெங்கநாச்சியாரின் திருவடி சேவை நடைபெற்றது.
விழாவில் செவ்வாய்க்கிழமை (அக். 24) விஜயதசமியையொட்டி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி காட்டழகிய சிங்கா் கோயில் ஆஸ்தான மண்டபத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். பின்னா், மாலை 6.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி அங்குள்ள வன்னிமரத்தில் அம்பு போட்டாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், அங்கிருந்து புறப்பட்டு சாத்தார வீதி வழியாக வலம் வந்து இரவு 8.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலின் சந்தனு மண்டபத்திற்கு நம்பெருமாள் வந்து சோ்ந்தாா். பின்னா் 9.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் அமுது பாறையில் திருமஞ்சனம் கண்டருளினாா்.
திருவானைக்கா கோயிலில்: திருவானைக்காவில், சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 9 நாள்கள் நடைபெற்று வந்த இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் அகிலாண்டேஸ்வரி பல்வேறு அலங்காரங்களில் நவராத்திரி கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும், ஒவ்வொரு நாளும் பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நவராத்திரி மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, மாலை 6 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் எழுந்தருளி நவராத்திரி மண்டபம் அருகேயுள்ள வன்னிமரத்தில் அம்பு போட்டனா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.