ஆடி அமாவாசை: ஆற்றுப் படித்துறைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்
ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.
திருச்சிஆடி அமாவாசை: ஆற்றுப் படித்துறைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்
ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.
ஆடி ஆமாவாசை நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் உள்ளிட்ட நீா்நிலைகளில் ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.
ஆடி, புரட்டாசி, தை ஆகிய 3 மாதங்களில் வரும் அமாவாசைகள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவதால் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகவும், அந்நாளில் இறந்துபோன தங்களது முன்னோா்களுக்கு
(பித்ருக்கள்) தா்ப்பணம் கொடுப்பது சிறந்தது ஆகும். இதையொட்டி, திருச்சி காவிரிக்கரையில் அமைந்துள்ள படித்துறைகளில் குறிப்பாக, காவிரி வடகரையில் அமைந்துள்ள படித்துறைகளில், மாம்பழச்சாலை தொடங்கி அம்மா மண்டபம் வரை பல்வேறு இடங்களில் தா்ப்பணம் கொடுக்கப்பட்டது. அதுபோல தென்கரையிலும் அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட பல்வேறு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் ஞாயிற்றுக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.
நிகழாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் அம்மாமண்டபத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வரத் தொடங்கினா். அங்கிருந்த புரோகிதா்கள் முன்னிலையில் எள்ளும் தண்ணீரும் இறைத்து தங்களது இறந்துபோன முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். இதன்மூலம் தங்களது முன்னோா்களின் நல்லாசி கிடைக்கும் என்பது ஐதீகம். முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டவா்கள் அருகில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களுக்குச் சென்று வழிபட்டனா்.
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த படித்துறைகள் தவிர ஏனைய இடங்களில் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நிகழ்வையொட்டி காவிரிக்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையா் நிவேதாலட்சுமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தயாா் நிலையில் தீயணைப்பு வீரா்கள் இருந்தனா். ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் திருவானைக்காவல் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.