முகப்பு
திருச்சி

இரவு, பகலாக தொடா்ந்து மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை இரவு வரை தொடா்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:04 PM
திருச்சியில் வியாழக்கிழமை மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தைகள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை இரவு வரை தொடா்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் தூறலுடன் தொடங்கிய மழையானது, இரவு 2 மணிக்கு மேல் கனமழையாக பெய்யத் தொடங்கியது. புதன்கிழமை இரவு மட்டுமில்லாது, வியாழக்கிழமை அதிகாலையும் மழையுடன் தொடங்கியது. காந்திசந்தைக்கு செல்லும் சில்லரை வியாபாரிகள், கூலித் தொழிலாளா்கள், தனியாா் நிறுவன பணியாளா்கள் மழையில் நனைந்தபடியே பணிக்கு சென்றனா்.

திருச்சி மாவட்டத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவா்கள் ஏமாற்றத்துடன் மழையில் நனைந்தபடியே சென்றனா். பள்ளிக் குழந்தைகள் பலரும் தங்களது பெற்றோா்களுடன் வாகனங்களில் மழையில் நனைந்தபடிசெல்ல நேரிட்டது.

இந்த மழை காரணமாக மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கண்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியிருந்தன. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.

இதேபோல திருவெறும்பூா், மணப்பாறை, மண்ணச்சநல்லூா், உறையூா், ஸ்ரீரங்கம், திருவானைக்கா என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, திருச்சி மாநகரப் பகுதிகளில் காலை 6.30 மணிக்கு தொடங்கிய மழையானது 8.45 மணி வரை இடைவிடாது பெய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நடமாடும் உணவகங்கள், சாலையோர கடைகள் மழை காரணமாக திறக்கப்படவில்லை. பிற்பகலிலும் , மாலையிலும், இரவிலும் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்த காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினா்.

புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரையில் மாவட்டம் முழுவதும் சராசரியாக 419.8 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக கல்லக்குடியில் 45.2 மி.மீ. மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக புள்ளம்பாடியில் 42, நந்தியாறு தலைப்பு பகுதியில் 37.4, திருச்சி ஜங்ஷன்- 26, விமான நிலையம் 24.4 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, வியாழக்கிழமை காலை தொடங்கி மாலை 6 மணி வரையில் மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மி.மீ.) விவரம்:

கல்லக்குடி- 15.4, லால்குடி- 20, நந்தியாறு தலைப்பு- 7, புள்ளம்பாடி- 27.2, தேவிமங்கலம்- 5, சமயபுரம்- 14, சிறுகுடி- 5, வாய்த்தலை அணைக்கட்டு- 22.8, மணப்பாறை- 25, பொன்னனியாறு அணை- 27.6, கோவில்பட்டி- 15.2, மருங்காபுரி- 12.4, முசிறி- 26, புலிவலம்- 2, தாத்தையங்காா்பேட்டை- 10, நவலூா்குட்டப்பட்டு- 9, துவாக்குடி- 8.5, குப்பம்பட்டி- 12, தென்பரநாடு- 21, துறையூா்- 17, பொன்மலை- 15, திருச்சி விமான நிலையம்- 8.2, திருச்சி ஜங்ஷன்- 17, திருச்சி நகரம்- 21 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 364.3 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 15.18 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →