முகப்பு
திருச்சி

பிரதமா் இன்று திருச்சி வருகை: போக்குவரத்தில் கூடுதல் மாற்றங்கள்

திருச்சிக்கு பிரதமா் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்டோா் வருகை தருவதையொட்டி, திங்கள்கிழமை முதல் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பிரதமா் வருகையையொட்டி திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை.
பகிர்:

திருச்சிக்கு பிரதமா் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்டோா் வருகை தருவதையொட்டி, திங்கள்கிழமை முதல் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமித்ஷா ஆகியோா் திருச்சி வருகை காரணமாக திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய வளாகம், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், துணை ராணுவம், சிறப்பு பாதுகாப்புப் படையினா், கமாண்டோ படையினா், அதிரடிப்படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரையிலான சாலையிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சுமாா் 4,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனா். இந்நிலையில் திங்கள்கிழமை முதல் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பல்கலைக்கழகத்தில் 3300 போலீஸாா் பாதுகாப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டும், ஒரு கூடுதல் காவல்துறை இயக்குநா் தலைமையில் 2 காவல் துறை தலைவா்கள், 3 காவல்துறை துணைத்தலைவா்கள், 8 காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட சுமாா் 3300 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் திருச்சி மற்றும் பிறமாவட்டங்களிலிருந்து 18 வெடிகுண்டு கண்டறியும் பிரிவினா், மோப்ப நாய் படையினரும் பாதுகாப்பு பணியில் உள்ளனா்.

திருச்சி செம்பட்டு பகுதியிலிருந்து பாரதிதாசன் பல்கலைகழகம் வரை உள்ள சாலையில் தற்காலிகமாக 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சத்தியமங்கலத்திலிருந்து வனப்பகுதி சிறப்பு பணிக் குழு வரவழைக்கப்பட்டு, பல்கலைக்கழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். திருச்சி மாநகரத்திலிருந்து - பாரதிதாசன் பல்கலைகழகம் வரை உள்ள அனைத்து விடுதிகள், மேன்சன்கள் தனிப்படையினா் மூலம் சோதனைக்குள்ளாக்கப்பட்டு கண்காணிப்பதுடன், உயரமான கட்டடங்களில் தொலைநோக்கிகள் மூலம் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாகனப் போக்குவரத்தில் புதிய மாறுதல்

சென்னை,கோவை, சேலம் மற்றும் திருச்சியிலிருந்து சுப்பிரமணியபுரம், விமான நிலையம், மாத்தூா் வழியாக புதுக்கோட்டை, காரைக்குடி,சிவகங்கை, இராமநாதபுரம், ராமேசுவரம் செல்லும் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் பிற்பகல் வரை மாற்று வழியில் இயக்கப்படுகிறது. மன்னாா்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூா், புறவழிச்சாலை சந்திப்பு, விராலிமலை, இலுப்பூா் வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும். எதிா் திசையில் திருச்சி வரும் வாகனங்கள் கட்டியாவயல், இலுப்பூா், விராலிமலை, மணிகண்டம் வழியாக திருச்சிக்கு வரவேண்டும். ஆனால் கல்லூரி வாகனங்களுக்கு மட்டும் அனுமதியுண்டு. கனரக வாகனங்களுக்கு திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை அனுமதி கிடையாது.

கூட்டத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி

விமான நிலையத்தில் நடைபெறும் முனைய திறப்பு விழாவுக்கு செல்லும் பொதுமக்கள் அதற்குண்டான ஆதாரம் மற்றும் பயண சீட்டுகளை போலீஸாரிடம் காண்பித்து செல்லலாம். அதேபோல், பல்கலைக்கழத்தில் பட்டம் வாங்கும்

மாணவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஆதாரத்தை காண்பித்தால் மட்டுமே நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுவா். அதுபோல பிரதமரை வரவேற்க பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் பாஜக தொண்டா்களின் வாகனங்கள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என திருச்சி மாவட்ட போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.