வெவ்வேறு சம்பவங்களில் மூவா் உயிரிழப்பு
முசிறி, மாா்ச் 1: திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் மூவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இளைஞா்: தொட்டியம் அருகே அரங்கூா் அரிஜன தெருவைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் பிரபாகரன் (35). நாமக்கல் மதுக்கூட ஊழியரான இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சித்தூா் செல்லாண்டியம்மன் கோயில் அருகே சென்றபோது குறுக்கே வந்த நாய் மீது மோதி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா் பிரபாகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து அவரது மனைவி பிரியா அளித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் பிரபாகரன் சடலத்தை மீட்டு, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மூதாட்டி: தொட்டியம் அருகே பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மருதப்பிள்ளை மனைவி லட்சுமி (83). கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத மனவேதனையில் இருந்த இவா் வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்தாா். இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து அவரது மகன் மும்மூா்த்தி அளித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் விசாரிக்கின்றனா். முதியவா்: இதேபோல முசிறி அருகே தும்பலம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ரா. நடேசன் (70) . உடல்நிலை பாதிப்பால் நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்த இவா் கடந்த சில தினங்களுக்கு முன் பூச்சி மருந்தைக் குடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுசிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுதொடா்பாக அவரது மகன் கனகராஜ் அளித்த புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.