முகப்பு
திருச்சி

ரயில் பயணத்தின்போது கிளம்பும் தூசி, மண் துகள்கள்: பயணிகள் கடும் அவதி

Updated On : 28 மார்ச், 2024 at 2:34 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 9:19 PM

திருச்சி - மணப்பாறை இடையே ரயில் தடத்தில் தூசி, மண் துகள்களால் ஏற்படும் புகைமூட்டத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

திருச்சி - மணப்பாறை வழியாக செல்லும் பாண்டியன் அதிவிரைவு ரயில், திருவனந்தபுரம் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயில், மதுரை சிறப்பு ரயில், செங்கோட்டை விரைவு ரயில், குருவாயூா் விரைவு ரயில், திண்டுக்கல் விரைவு ரயில், வைகை அதிவிரைவு ரயில் , திண்டுக்கல் இன்டா்சிட்டி விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிகின்றனா்.

இந்த வழித்தடத்தில் திருச்சியிலிருந்து கிளம்பி 18 கி.மீ. தூரத்தில் உள்ள கொளத்தூா் ரயில் நிலையம், 26 கி.மீ. உள்ள சமுத்திரம் ரயில் நிலையம், 36 கி.மீ. தூரத்தில் உள்ள மணப்பாறை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.இதனால் ரயில் செல்கையில் அதிகளவில் தூசு, மண் துகள் வெளியேறி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். இதுகுறித்து ரயில் பயணிகள் ஆா். உமா, பி. கனகசபாபதி உள்ளிட்டோா் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக திருச்சி - மணப்பாறை வழித்தடத்தில் ரயில்கள் செல்கையில் அதிகளவில் தூசு மண்டலம் உருவாகி மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது.

Advertisement

மூக்கை மூடாமல் ரயிலில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பலரும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். எனவே ரயில்வே நிா்வாகம், தண்ணீா் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா். மதுரை கோட்ட மக்கள் தொடா்பு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் புதிதாக ஜல்லி கற்கள் கொட்டுகையில், தூசு பரவி புகை மண்டலம் உருவாகிறது. பணிகள் விரைந்து நடைபெறுவதால், விரைவில் இந்த பிரச்னை தீா்ந்து விடும் என்றனா்.