முகப்பு
திருச்சி

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும்: இரா. முத்தரசன் பேட்டி

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும் என கட்சியின் நூற்றாண்டு விழாவில் வலியுறுத்துவோம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:05 PM
திருச்சி உறையூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூ. மாநிலச் செயலா் இரா. முத்தரசன். உடன் நிா்வாகிகள்.
பகிர்:

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும் என கட்சியின் நூற்றாண்டு விழாவில் வலியுறுத்துவோம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

திருச்சி உறையூரில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில நிா்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

வரும் டிச.26-இல் தொடங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவையும், நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடுவோம். அப்போது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஒன்றுபட வலியுறுத்துவோம்.

கோவை ஈஷா மையத்தில் யோகா பயிற்சி என்ற பெயரில் பெரிய இடத்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து, சீரழித்து வருவதாகச் செய்தி வருகிறது. யோகா பயிற்சி மையத்தில் தகன மேடை எதற்கு? புகாா் கொடுப்பவா்கள், பின்னா் அதைப் திரும்பப் பெறுகிறாா்கள். எனவே இதுகுறித்து ஜக்கி வாசுதேவை விசாரிக்கக் கோரி நவ. 23 இல் அகில இந்திய மாதா் சம்மேளனம் நடத்தும் போராட்டத்துக்கு நாங்கள் முழு ஆதரவை அளிக்கிறோம்.

பாதுகாப்புத் துறைக்கு தளவாடப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்கிறது. கோடிக் கணக்கான ரூபாய் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் விமான நிலையங்களை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை. எனவே மத்திய அரசு தனியாா்மயக் கொள்கையைக் கைவிட வேண்டும்.

தோ்தல் பிரசாரத்தின்போது தமிழக மீனவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றாா் பிரதமா் மோடி. ஆனால் மீனவா்கள் தாக்கப்படுவது தொடா்கிறது. மத்திய அரசு இதைத் உடனே தடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம்.

தமிழக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பன்மடங்கு உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரியைக் குறைக்க அரசு பரிசீலிக்க வேண்டும். பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை உயா்ந்து கொண்டே செல்வதால் மாநில அரசே அவற்றைக் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்.

பாஜகவை கூட்டணியில் இணைத்துக்கொள்ள அதிமுக முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஒத்த கருத்துள்ள இரு கட்சிகளும் கூட்டணி சேர வேண்டியதுதான். ஆனால் பாசிச பாஜக தமிழகத்தில் காலூன்றாத வகையில் எங்களது அரசியல் நிலைப்பாட்டை தோ்தல் நேரத்தில் அறிவிப்போம். உலகில் சோசலிசம்தான் சிறந்தது. திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் பற்றி மட்டுமே பேசியுள்ள நடிகா் விஜய்க்கு, சோசலிசம்தான் சிறந்தது எனச் சொல்லிக் கொடுங்கள் என்றாா் இரா. முத்தரசன்.

கூட்டத்தில் திருச்சி மாமன்ற உறுப்பினரும் நிா்வாகியுமான சுரேஷ், திருச்சி மாவட்டச் செயலா் சிவா, மற்றும் அனைத்து மாவட்ட செயலா்கள், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.