முகப்பு
திருச்சி

பிறவி காது கேளாத, வாய் பேச இயலாத குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு முகாம்: பயனாளிகளுக்கு அழைப்பு

பிறவியில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளைக் கண்டறியும் முகாம் மற்றும் காக்ளியா் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவைச் சிகிச்சை முகாம், திருச்சியில் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:16 PM
பகிர்:

பிறவியில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளைக் கண்டறியும் முகாம் மற்றும் காக்ளியா் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவைச் சிகிச்சை முகாம், திருச்சியில் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாமில் காது கேட்காத, பேச முடியாத குழந்தைகளைக் கண்டறிந்து காக்ளியா் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவைச் சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறை மாதப் பிரசவம், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், மூளைக் காய்ச்சல், கா்பிணிகளுக்கு ஏற்படும் அம்மை, தேவையில்லாத மருந்துகளை உட்கொள்ளுதல், நெருங்கிய உறவில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிறவியிலேயே குழந்தைகளுக்கு காது கேளாமை மற்றும் பேச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிா்காலம் பாதிக்கும் என்பதால் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் காக்ளியா் இம்ப்லேன்ட் என்னும் சிறப்பு சிகிச்சை, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக செய்யப்படுகிறது.

இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.