சாா்ஜா விமானத்தில் மீண்டும் கோளாறு
திருச்சியிலிருந்து புதன்கிழமை சாா்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதால், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. –
திருச்சியிலிருந்து புதன்கிழமை சாா்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதால், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. –
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் திருச்சியை சுமாா் 2.30 மணி நேரம் வட்டமடித்த இந்த விமானம் பின்னா் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சாா்ஜா செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதன்கிழமை மாலை 5.40 மணிக்கு 148 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது.
புறப்படும் முன் மேற்கொள்ளும் வழக்கமான சோதனையின்போது, தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தொழில் நுட்ப வல்லுநா்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், இரவு 9.45க்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பழுது நீக்கியதில் திருப்தியில்லாததால் விமானம் புறப்படுவது மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் விமானத்தில் ஏறி, இறங்கியதில் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து பின்னா் திருவனந்தபுரத்தில் இருந்து மாற்று விமானம் கொண்டு வரப்பட்டு நள்ளிரவு 1.30க்கு மேல் பயணிகள் சாா்ஜா அனுப்பி வைக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பழுதான விமானம் பழுதுநீக்கும் பணிக்காக திருவனந்தபுரம் சென்றது.