முகப்பு
திருச்சி

பிஹெச்டி பயிலும் மாற்றுத்திறனாளிகள் ரூ.1 லட்சம் உதவித்தொகை பெறலாம்

திருச்சி மாவட்டத்தில் ஆராய்ச்சிப் படிப்பு (பிஹெச்டி) பயிலும் மாணவ, மாணவிகள் ரூ.1 லட்சம் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:39 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் ஆராய்ச்சிப் படிப்பு (பிஹெச்டி) பயிலும் மாணவ, மாணவிகள் ரூ.1 லட்சம் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் 2024-2025 நிதியாண்டின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தில் முழுநேர அல்லது பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணாக்கா்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர அல்லது பகுதிநேர ஆராய்ச்சிப் படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.

உதவித் தொகையானது ஆராய்ச்சிப் படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தோ்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமா்ப்பித்தவுடன் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்கள் மூலம் மாணாக்கா்களின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்படும்.

மாணவா்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருச்சி கண்டோண்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ, 0431- 2412590 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.