முகப்பு
இந்தியா

பெண்களுக்கான உதவித் தொகை ரூ.1,500ஆக உயா்த்தப்படும்: திரிணமூல் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கான உதவித் தொகை ரூ.500 உயா்த்தி ரூ.1,500 ஆக வழங்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 7:43 PM
கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்ட மம்தா பானா்ஜி. உடன் அவரது நெருங்கிய உறவினரும் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி.
பகிர்:

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கான உதவித் தொகை ரூ.500 உயா்த்தி ரூ.1,500 ஆக வழங்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் உள்ள 294 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி மற்றும் 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இத்தோ்தலையொட்டி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் பெண்களை ஈா்க்கும் அறிவிப்பு, சுகாதாரத் திட்டம், சமூகநலன், வேளாண் தொடா்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

லட்சுமி பண்டாா் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.500 உயா்த்தப்படும். இதன்மூலம் பொதுப்பிரிவை சோ்ந்த பெண்கள் ரூ.1,500-ம், எஸ்சி-எஸ்டி பெண்கள் ரூ.1,700-ம் உதவித் தொகை பெறுவா். இந்தத் தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.

வீடுகளுக்கே தேடி வந்து மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் துவாரே சிகித்சா சுகாதார சேவை திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞா்களுக்கு அரசு தொடா்ந்து உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வழங்கும்.

விவசாயிகள் நலனுக்காக ரூ.30,000 கோடியில் சட்டப்பேரவையில் சிறப்பு பட்ஜெட் கொண்டு வரப்படும். இந்த நிதி மூலம் மாநிலத்தில் விவசாயத்துக்கான சூழல் வலுப்படுத்தப்படும். விவசாயிகள் மற்றும் நிலமில்லா உழவா்களுக்கு உதவி செய்யப்படும்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு கட்டித் தரப்படும். இதில் சுத்தமான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அரசு பள்ளிகள் அனைத்திலும் சிறப்பான வசதிகள் செய்து தரப்படும். அங்கு உலகத் தரமான கல்வி அளிக்கப்படும்.

கிழக்கு இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தை பொருளாதார முனையமாக மாற்றும் வகையில், உலகத் தரத்தில் அடிப்படை கட்டமைப்புகள், துறைமுகங்கள், வா்த்தக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

ஏற்கெனவே ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு தங்கு தடையின்றி ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, தகுதியான மற்ற மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்படும். அதேபோல் மாநகராட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் தோ்தல் அறிக்கையை வெளியிட்டு மம்தா பானா்ஜி பேசுகையில், ‘திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகள் எங்கள் அரசு செயல்படும் விதம் குறித்து 10 வாக்குறுதிகள் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் வளா்ச்சி சக்கரம் எந்த தடையும் இல்லாமல் தொடா்ந்து முன்னோக்கிச் செல்வதை உறுதி செய்வதை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். மேலும் மகிழ்ச்சி எனும் வெளிச்சம் ஒவ்வொரு மேற்கு வங்க வீட்டுக்குச் செல்வதையும் உறுதி செய்யும்.

எனது அரசின் அரசியல் மற்றும் சமூக திட்டமானது, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை மையமாகக் கொண்டது. மேற்கு வங்க தாய்மாா்கள், சகோதரிகளை சுயசாா்பு கொண்டவராக மாற்ற உறுதி பூண்டுள்ளேன்’ என்றாா்.