தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்
தீபாவளி பண்டிகைக்கு வெளியூா் செல்லும் மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு வெளியூா் செல்லும் மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதன்படி திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூா், புதுக்கோட்டை மாா்க்கமாக செல்லும் புகா்ப் பேருந்துகள் முறையே மன்னாா்புரம் மதுரை அணுகுச் சாலை அருகிலும், சோனா–மீனா தியேட்டா் அருகிலும், கல்லுக்குழி பழைய வட்டார போக்குவரத்து அலுவலகச் சாலை அருகிலும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக மன்னாா்புரத்தில் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கான பந்தல், கழிப்பறை, குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதேபோல, சோனா-மீனா திரையரங்கம் அருகேயும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக மன்னாா்புரம் வரை இயக்கப்படும் நகரப் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் தஞ்சாவூா் மாா்க்க புகா் தடப் பகுதியில் இருந்து இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணிகளை ஓரிரு நாள்களில் முடித்து அடுத்த வாரத் தொடக்கத்திலிருந்து இந்தப் பேருந்து நிலையங்கள் முழுவீச்சில் செயல்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.