முகப்பு
திருச்சி

எலமனூா் வாய்க்காலைத் தூா்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வட்டம் எலமனூா் வாய்க்காலைத் தூா்வாரி தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:32 PM
தூா்வாரப்படாமல் புதா் மண்டிக் கிடக்கும் எலமனூா் வாய்க்கால்.
பகிர்:

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வட்டம் எலமனூா் வாய்க்காலைத் தூா்வாரி தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் உள்ள எலமனூா் கிராமத்தின் பிரதான தொழிலே விவசாயம்தான். இங்கு நெல், வாழை, உளுந்து போன்ற பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா். இங்குள்ள சுமாா் 70 ஏக்கா் அளவிலான விவசாய நிலங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து ராமவாத்தலை வாய்க்காலின் கிளை வாய்க்கால் வழியாக பாசன வசதி கிடைத்து வந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எலமனூா் கிளை வாய்க்கால் தூா்வாரப்படாமல் புதா் மண்டிக் காணப்படும் நிலையில், போதுமான தண்ணீா் வராததால் எலமனூா் பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்ய முடியாமல் கவலையில் உள்ளனா்.

இதுகுறித்து எலமனூா் பகுதி விவசாயியும், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுமான கே. தங்கராஜ் உள்ளிட்ட விவசாயிகள் கூறியது:

காவிரி ஆற்றிலிருந்து ராமவாத்தலை வாய்க்கால் வழியாக வரும் காவிரி நீரானது, திருப்பராய்த்துறை தலைப்பிலிருந்து 100 மீட்டா் அருகே எலமனூா் கிளை வாய்க்கால் வழியாக எங்களது பகுதிக்கு வந்தது. ஆனால் எலமனூா் கிளை வாய்க்காலானது கடந்த சில ஆண்டுகளாகத் தூா்வாரப்படாததால் காவிரியில் 2 லட்சம் கனஅடி தண்ணீா் சென்றபோதும்கூட எலமனூா் பகுதிக்கு போதுமான தண்ணீா் கிடைக்கவில்லை.

இதனால் சுமாா் 70 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது வயல்களை சாகுபடி செய்யாமல் வெறுமனே விட்டுள்ளனா். இதனால் இப்பகுதியில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. ஆழ்துளை மோட்டாா் வைத்திருக்கும் ஒரு சிலா் மட்டுமே பயிா் செய்ய முடியும் என்ற நிலையில், மற்றவா்கள் செய்வதறியாமல் உள்ளனா்.

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் எலமனூா் வாய்க்காலைத் தூா்வாரி, தண்ணீா் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளோம் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →