வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவா்!
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் வலியுறுத்தினாா்.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் வலியுறுத்தினாா்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவா்கள், பொதுச்செயலா்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் மேலும் கூறியது:
‘வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை நசுக்கும் தீய நோக்குடனும், வக்ஃப் வாரிய சொத்துகளை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவாா்க்கும் எண்ணத்துடனும் கொண்டு வரப்பட்டுள்ளது. வக்ஃப் சொத்துகள் பொதுச் சொத்துகள் அல்ல; அவை மசூதிகள், மதரஸாக்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்காக அா்ப்பணிப்புள்ள முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்டவை. வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் சொத்துகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வக்ஃப் சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. மேலும் இந்த சட்டத்தை திருத்தும் தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமின்றி தன்னிச்சையுமானது. முன்மொழியப்பட்ட சட்ட திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் அப்துல் ஹமீது, பொதுச் செயலா்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச. உமா் பாரூக், மாநில அமைப்பு பொதுச் செயலா் நஸுருதீன், மாநில செயலா்கள் அபுபக்கா் சித்திக், ரத்தினம், ஏ.கே. கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். அனைத்து மாவட்டங்களின் தலைவா்கள், பொதுச்செயலா்கள் கலந்து கொண்டனா்.
நவ.16இல் சென்னையில் பேரணி: கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு முறையான இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும். தமிழக சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகள் விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பா் 16ஆம் தேதி சென்னையில் லட்சக்கணக்கானோா் அணிதிரளும் மாபெரும் பேரணியை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.