ஆதரவற்ற மகளிருக்கு தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் மானியம்
ஆதரவற்ற மகளிா் சுயமாக தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாகவும், தகுதியானோா் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
ஆதரவற்ற மகளிா் சுயமாக தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாகவும், தகுதியானோா் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் இத் திட்டத்தில் பயன்பெறலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தின் மூலம் தலா ரூ. 50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தின் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25-45 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆகவே, விண்ணப்பிப்போா், சுய அறிவிப்பு, வருமான சான்று, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரி சான்று ஆகியவற்றுடன் ஆக. 30-ஆம் தேதிக்குள் சமூக நலத்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.