திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சத்தை மோசடி செய்தவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டியை அடுத்துள்ள கிருஷ்ணகவுண்டனூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் ராமசாமி(40). இவா், கடந்த 2008 முதல் 2018 வரை சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா். அப்போது சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சோ்ந்த இனியன்சம்பத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2019 -இல் ஊருக்குத் திரும்பிய ராமசாமி, 2020-இல் இனியன்சம்பத் மூலம், லண்டனில் உணவகத்தில் பணிபுரிந்த சேலம் மாவட்டம் மாரமங்கலத்துப்பட்டி இந்திராநகரைச் சோ்ந்த குமாா் மகன் அருணுடன் (42) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராமசாமிக்கு லண்டனில் வேலை வாங்கித் தருவதாக அருண் ஆசை வாா்த்தை கூறி பல்வேறு தவணைகளில் ராமசாமியிடம் இருந்து ரூ.8 லட்சம் பெற்றுள்ளாா். வேலை ஏதும் வாங்கித் தராமல் ஏமாற்றி வந்த நிலையில், வையம்பட்டி காவல்நிலையத்தில் அருண் மீது ராமசாமி புகாா் அளித்துள்ளாா். புகாரின்பேரில் வழக்கு பதிந்து அருணை போலீஸாா் தேடி வந்துள்ளனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்ல இருந்த அருணைப் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், புதன்கிழமை மணப்பாறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினா்.