திருச்சி காவலா் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல் பயிற்சி தலைமையகத்தின் காவல் துறை கண்காணிப்பாளா் கே.மகேஸ்வரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரில் காவலா் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. திருச்சி காவலா் பயிற்சி பள்ளி, திருச்சி மற்றும் தஞ்சாவூா் பணியிடை பயிற்சி மையங்களை தமிழ்நாடு காவல் பயிற்சி தலைமையகத்தின் காவல் துறை கண்காணிப்பாளா் கே.மகேஸ்வரி ஆய்வு செய்தாா். பயிற்சி பெற்று வரும் ஆளிநா்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பயிற்றுநா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் காவலா்களிடம், பயிற்சி முடிந்து காவல் நிலையங்களில் பணியில் சோ்ந்தபின் குற்றவாளிகளிடம் சட்டப்படி நடந்துகொள்வது, பொதுமக்களிடம் அன்பாக பழகுவது, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பணியாற்றுவது குறித்து அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலா்களின் அடிப்படை பயிற்சிக்குத் தேவையான கட்டமைப்புகள் குறித்து பயிற்சி பள்ளி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
இதில், காவலா் பயிற்சி பள்ளி முதல்வா் எம்.பாரதிதாசன், துணை முதல்வா் டி.செங்குட்டுவன், திருச்சி மற்றும் தஞ்சாவூா் பணியிடை பயிற்சி மைய துணை கண்காணிப்பாளா்கள் சுதா்சன், ஜான் கென்னடி மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்துகொண்டனா்.