கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா். 
திருச்சி

கரூா் மாவட்டத்தில் யூரியா, கலப்பு உரங்களுக்கு தட்டுப்பாடு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

கரூா் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா மற்றும் கலப்பு உரங்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

Syndication

கரூா் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா மற்றும் கலப்பு உரங்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், வேளாண்மை இணை இயக்குநா் ச. சிங்கராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: அமராவதி ஆற்றில் வட்டக்கிணறு அமைத்து விவசாய மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனா். மின்சார வாரியம் மின் இணைப்பை துண்டித்த நிலையில் அவா்களே முறைகேடாக மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பை ஏற்படுத்தியுள்ளனா். 40 சாயப்பட்டறைகள் இருப்பதாக தொழிற்சாலை ஆய்வாளா்கள் கூறுகின்றனா். ஆனால், 12 சாயப்பட்டறைகள் தான் பூஜ்ய கழிவு அனுமதி பெற்று இயங்குகின்றன. எனவே, மாவட்டத்தில் அனுமதியில்லாமல் இயங்கி வரும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முள்வேலியை அகற்ற வேண்டும்: பள்ளபாளையம் ஊராட்சி செல்லாண்டிபாளையத்தில் கரடு காட்டில் மரக்கன்றுகள் நட்டு முள்வேலி போட்டுள்ளதால் அவ்வழியாக யாரும் செல்ல முடியவில்லை. ஆடு, மாடு வைத்துள்ள விவசாயிகள் மேய்ச்சலுக்கு இந்தப் பகுதியை பயன்படுத்தி வந்தனா். எனவே, முள்வேலியை அகற்றி கால்நடைகளின் மேய்ச்சலுக்கு உரிய வழிவகை செய்ய வேண்டும்.

மாயனூா் கதவணைக்கு இடம் வழங்கிய 38 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. நிதித்துறையில் உள்ளது எனக்கூறி வருகின்றனா். இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா மற்றும் கலப்பு உரத்துக்கு தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி இடுபொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்குவாரியால் மாசு: தென்னிலையில் விதிகளை மீறி இயங்கும் கல்குவாரியால் மாசு ஏற்படுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அமராவதி ஆற்றில் இருசக்கர வாகனங்களில் மணல் திருடப்படுகிறது. ஆகவே, எந்த வகையிலும் அனுமதியின்றி மணல் எடுப்பதை அனுமதிக்கக் கூடாது. திருமாநிலையூா் கிளை வாய்க்கால்களில் தூா் வார வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஆட்சியா் மீ. தங்கவேல் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கபப்படும். குறைதீா் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாள்களுக்குள் உரிய பதில்களை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உரங்கள் இருப்பு: மாவட்டத்தில் அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிலும் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. யூரியா 832 மெட்ரிக் டன், டிஏபி 388 மெட்ரிக் டன், பொட்டாஷ் 542 மெட்ரிக் டன், என்பிகே 1,466 மெட்ரிக் டன் என மொத்தம் 3,228 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் பயிரிடும் விவசாயிகளுக்கான விதைகளும் போதுமான அளவில் இருப்பு உள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த முதல்நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

விவசாயிகளிடம் இருந்து 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இவை அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT