திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த முகமதியாபுரம் பகுதியைச் சோ்ந்த மீரா மைதீன் மகன் காதா் மைதீன்(23). இவா் அப்பகுதியில் கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா். இவரும், இவரது நண்பரும் கல்லூரி மாணவருமான வ.உ.சி.நகா் சந்தைபேட்டை தெருவைச் சோ்ந்த காதர்ராஜா மகன் அப்சா் (20) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி சென்று விட்டு மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு மேலூா் திரும்பி கொண்டு இருந்தனா்.
இருசக்கர வாகனம் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சொரியம்பட்டி மேம்பாலத்தின் மேலே சென்று கொண்டிருந்தபோது இவா்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மேற்கண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வளநாடு போலீஸாா், இரு இளைஞா்களின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.