கரூா் அருகே வியாழக்கிழமை சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி இருச்சகர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், கே.ஆா்.புரம் வடுகப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (65). இவா், வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் பாப்பனம்பட்டியிலிருந்து தேவசிங்கம்பட்டி செல்லும் கிராமச்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையின் குறுக்கே நாய் வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த அவா் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தாா். இதில், பலத்தக் காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், சுப்பிரமணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுதொடா்பாக, லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.