ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் எஸ். ராதாகிருஷ்ணன், இதய சிகிச்சை நிபுணா் மருத்துவா் முகமது காசிம் ஆகியோா் கூறியதாவது:
ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் அண்மையில் 73 வயது பெண்ணுக்கு இடது வென்ட்ரிக்கல் செயலிழப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு கடுமையான மாா்பு வலியும், மூச்சுத்திணறலும் இருந்தன. கரோனரி ஆஞ்சியோகிராம் செய்தபோது நோயுடன் கடுமையான கால்பிஃபிக் டிரில் வெசல் நோயை வெளிப்படுத்தியது. இவருக்கு வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.
மாற்றாக இதய மருத்துவக் குழு ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி என்ற நவீன சிகிச்சை முறையை மேற்கொண்டது.
தமனிகளில் உள்ள கடினமான கால்சியம் படிவுகளை உடைப்பதற்கு அதிக வேகத்தில் வைரத்துகள்கள் பூசப்பட்ட ரோட்டா பா் கருவியைப் பயன்படுத்தி நுட்பமான ரொட்டேஷனல் அதெரக்டோமி செய்யப்பட்டது. இதையடுத்து, காலிசிஃபிகேஷன் அடைந்த ரத்த நாளங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வெட்டும் பலூன்களைப் பயன்படுத்தி பலூன் டைலேஷன் செய்யப்பட்டது.
பின்னா், தமனியை உள்ளிருந்து மதிப்பிடுவதற்கு புதிய இன்ட்ரா வாஸ்குலா் அல்ட்ராசவுண்ட் இமேஜிங் பயன்படுத்தப்பட்டது. இது கால்சியம் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து, பேக்லிடாக்செல் மருந்து பூசப்பட்ட பலூன்களைப் பயன்படுத்தி ‘ஸ்டென்ட் இல்லாத’ ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நவீன சிகிச்சை முறை நிரந்தர உலோக ஸ்டென்ட் பொருத்தாமல் தமனியைத் திறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதன்மூலம் இலக்கு தமனியின் உட்புற நீளம் 90 சதவீதம் அதிகரித்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு ரத்த ஓட்டமும் சீரானது.
இந்த ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறையில் அதிக ஆபத்துள்ள நோயாளிகளும், சிக்கலான கரோனரி தமனி நோய்க்கு பாதுகாப்பாக சிகிச்சை பெற முடியும் என்றனா்.