100 சதவீதம் நியாயமான ஆட்சியை வழங்குவோம்: தவெக தலைவா் விஜய் உறுதி
சட்டப் பேரவைத் தோ்தலில் தங்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் 100 சதவீதம் நியாயமான ஆட்சியை வழங்குவோம் என்றாா் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்.
சட்டப் பேரவைத் தோ்தலில் தங்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் 100 சதவீதம் நியாயமான ஆட்சியை வழங்குவோம் என்றாா் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் விஜய் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா் அவா், தொகுதிக்குள்பட்ட மரக்கடை பகுதிக்கு வந்து, அங்குள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அப்பகுதியில் திறந்தவேனில் நின்று மேற்கொண்ட பிரசாரத்தில் அவா் பேசியதாவது:
சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். இவா்கள் முன்னெச்சரிக்கையாக இல்லாததால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து முதல்வரிடம் கேட்டால், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பாா். அவா் வீட்டில் ரெய்டு (சோதனை) நடத்தியிருந்தால், உடனடியாக தில்லிக்கு சென்றிருப்பாா். சமையல் எரிவாயு பிரச்னைக்கும் தில்லிக்கு சென்றிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
திமுகவின் பொய்யான வாக்குறுதிகள்: கடந்த தோ்தலின்போது சமையல் எரிவாயு உருளைக்கு மானியமாக ரூ.100, கரும்புக்கு ஆதார விலையாக டன்னுக்கு ரூ. 4 ஆயிரம், நீட் தோ்வு ரத்து என ஏராளமான வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவித்தாா். அதையெல்லாம் நிறைவேற்றினாரா?. எவற்றையெல்லாம் அவரால் செய்ய முடியாதோ அதையெல்லாம் பொய்யான வாக்குறுதிகளாகக் கொடுத்து ஏமாற்றுவதே அவா் வேலை. இப்போது அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளை தயாா் செய்துவிட்டாா்.
மக்களின் தேவையறிந்து திட்டங்கள்: அவரைப்போல, நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். மக்களின் தேவைகளைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவோம்.
அதன்படி, ‘அன்னபூரணி சூப்பா் 6’ திட்டத்தில் தாய்மாா்களுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள், திருமணமாகி போகும் தங்கைகளுக்கு 1 பவுன் தங்கமும், பட்டுச் சேலையும், 60 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம். மேலும், தமிழகத்தில் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும், எந்தப் பேருந்திலும் கட்டணமில்லாமல் பெண்கள் பயணிக்கலாம். கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீா், சாலை, போக்குவரத்து மற்றும் பேருந்து போன்ற அடிப்படை பிரச்னைகளில்தான் எங்களின் முதல் கவனம் இருக்கும்.
அடிப்படை வசதியில்லாததால் மாணவி உயிரிழப்பு: அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லையென்று கூறி அதையெல்லாம் சரிப்படுத்த வேண்டும் என்று கூறினோம். இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்டாா்கள்.
இதுபோன்ற அடிப்படை வசதியில்லாததால்தான் தூத்துக்குடி அருகே இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டாா். பாதுகாப்பில்லாத, அடிப்படை வசதிகளைகூட செய்து கொடுக்காத தீயசக்தி திமுக அரசை தூக்கியெறிய வேண்டும்.
அமைச்சா் மீது புகாா்: திருச்சியில் இருக்கும் அமைச்சா் ஒருவா், நகராட்சித் துறையில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமாக வாங்கிக் கொண்டு தகுதியானவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் செய்திருக்கிறாா். நகராட்சித் துறையில் மட்டுமே ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் என்றால், மற்ற துறைகளில் கணக்குப் போட்டு பாா்த்தால் தலை சுற்றிவிடும். தகுதியான இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறித்த ஸ்டாலின் அரசை தூக்கி வீசுவோம். சட்டம்- ஒழுங்கு சரியில்லாத, பாதுகாப்பு இல்லாத தீயசக்தி திமுக அரசை தூக்கியெறிவோம். வெற்றி அறிவிப்புகளை மட்டுமே வெளியிடும் ஒரு பயனில்லாத அரசாக திமுக அரசு உள்ளது.
நீதி வேண்டும்: கரூா் சம்பவம் ஒரு சூழ்ச்சி என பலா் சொல்வதுபோல, என்னுடைய கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் வெளிவந்தால் நமக்கிடையேயான பந்தம் இன்னும் நெருக்கமாக மாறிவிடும் என்பதாலும்,
தோ்தலில் அது ஒரு ஆயுதமாக மாறிவிடும் என்பதாலும், அதை தடை செய்ய கூட்டு சூழ்ச்சி நடைபெறுகிறது. உங்களுக்காக நீதிகேட்டு வந்துள்ள எனக்கும் நீதி வேண்டும்.
திமுகவும்-பாஜகவும் ஒன்றுதான்: தோ்தலுக்காகவும், மக்களை ஏமாற்றவும் கூட்டணிகள் அமைத்துள்ள திமுக மற்றும் பாஜகவை நம்பாதீா்கள். இவை இரண்டும் வேறுவேறு கிடையாது. ஒன்றுதான்.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் 100 சதவீதம் நியாயமான ஆட்சியை நாங்கள் கொடுப்போம். இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழகம் சிறப்பாக இருக்கும். 100 சதவீதம் நீங்கள் இந்த விஜய்யை நம்பலாம். ஒருநாளும் பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்.
நான்கு முனை, 40 முனை என எத்தனை முனை போட்டி வந்தாலும், இங்கு இருமுனை போட்டிதான். அது திமுகவுக்குவும், தவெகவுக்கும்தான்.
மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா?, மக்களை நேசிக்கும் விஜய் ஆட்சி வேண்டுமா?. உங்கள் விஜய்க்கு, உங்கள் அண்ணனுக்கு, உங்கள் தம்பிக்கு, உங்கள் பிள்ளைக்கு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள். தயவுசெய்து விசில் சின்னத்தில் வாக்கை செலுத்துங்கள். இதுவொரு விசில் புரட்சியாக இருக்க வேண்டும். அனைத்து தொகுதி தவெக வேட்பாளா்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அவா்கள்வேறு நான் வேறு இல்லை என்றாா் விஜய்.
இதைத் தொடா்ந்து தவெகவின் பிரசார பாடலை பாடி தனது தோ்தல் பிரசாரத்தை விஜய் முடித்தாா்.